Wednesday, November 18, 2026 11:38 am
தமிழர்களின் கட்டிடக்கலைக்கும், வரலாற்றுப் பெருமைக்கும் மகுடம் சூட்டும் விதமாக ஒரு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. உலகப் புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவிலை, ‘உலகின் ஏழு அதிசயங்கள்’ பட்டியலில் சேர்க்க பரிந்துரை செய்யப்படும் என நாடாளுமன்ற நிலைக்குழு அறிவித்துள்ளது.
மத்திய அரசின் போக்குவரத்து, சுற்றுலா மற்றும் கலாசாரத்திற்கான நாடாளுமன்ற நிலைக்குழுவினர், அதன் தலைவர் சஞ்சய் குமார் ஜா தலைமையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆய்வு செய்தனர். இந்தக் குழுவில் மாநிலங்களவை உறுப்பினர் சுதா மூர்த்தி உட்பட எஸ். கல்யாணசுந்தரம், கே.இ. பிரகாஷ், அனுராக் சர்மா, பாபு சிங் குஷ்வாஹா, கேஷரி தேவ் சிங் ஜாலா, ஜக்கேஷ், அரவிந்த் கண்பத் சாவந்த் உள்ளிட்ட பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடம்பெற்றிருந்தனர்.
ஆய்வுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய நாடாளுமன்ற நிலைக்குழுத் தலைவர் சஞ்சய் குமார் ஜா, தனது வியப்பை வெளிப்படுத்தினார். அவர் கூறுகையில், “நான் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவன். இதுவரை இந்தக் கோவிலை புகைப்படங்களில் மட்டுமே பார்த்திருக்கிறேன். இன்றுதான் முதன்முறையாக நேரில் பார்க்கிறேன். என்னைப் போலவே, தமிழகத்தைச் சாராத மற்ற மாநில எம்பிக்களும் இப்போதுதான் முதல்முறையாக இங்கு வந்துள்ளனர். பொதுவாக இந்தியாவின் அதிசயம் என்றதும், வட இந்தியாவில் உள்ள தாஜ்மஹால் பற்றி மட்டுமே நாம் அதிகம் பேசுகிறோம். ஆனால், தஞ்சை பெரிய கோவில் தாஜ்மஹாலை விடவும் பிரம்மாண்டமாகவும், சிறப்பாகவும் உள்ளது. 1,000 ஆண்டுகளுக்கு முன்பு, எந்த நவீன தொழில்நுட்பமும் இல்லாத காலத்தில், இவ்வளவு பெரிய கோவிலை எப்படி கட்டினார்கள்? கோபுரத்தின் உச்சியில் இருக்கும் அந்த ஒற்றைக் கல்லை எப்படி மேலே கொண்டு சென்றார்கள் என்று அதிகாரிகளிடம் கேட்டறிந்தேன். உண்மையிலேயே இது மனித சக்திக்கு அப்பாற்பட்ட ஒரு மாபெரும் அதிசயம்.
ஏற்கனவே யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியச் சின்னமாக இந்தக் கோவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இப்போது, இதனை ‘உலக அதிசயங்கள்’ பட்டியலில் இடம்பெறச் செய்ய தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு எங்கள் குழு சார்பில் மத்திய அரசுக்கு நிச்சயம் பரிந்துரை செய்வோம்” என்று பெருமிதத்துடன் தெரிவித்தார்

