Wednesday, November 4, 2026 11:03 am
சிகிரியா பகுதியில் சுற்றுலாப் பயணிகளுக்கான சஃபாரியில் பயன்படுத்தப்படும் ‘ராணி’ என்ற யானையை, பாகன் ஒருவர் கொடூரமாகத் தாக்கும் காணொளி சமூக ஊடகங்களில் பரவியதைத் தொடர்ந்து, அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சிகிரியா பொலிஸார் உறுதியளித்துள்ளனர்.
யானையை சுற்றுலாப் பயணிகளுடன் சஃபாரிக்கு அழைத்துச் செல்ல வற்புறுத்தியபோது, பாகன் அதைத் தாக்கும் காட்சிகள் அந்தக் காணொளியில் பதிவாகியுள்ளதாக ‘அனிமல் வெல்பேர் கலெக்டிவ்’ (Animal Welfare Collective – AWC) அமைப்பு தெரிவித்துள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக சிகிரியா பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளதை உறுதிப்படுத்திய சிகிரியா பொலிஸார், சந்தேக நபரை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதாகத் தெரிவித்துள்ளதாக ‘அனிமல் வெல்பேர் கலெக்டிவ்’ அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
சுற்றுலாத் துறையில் யானைகளைப் பயன்படுத்துவது ,யானைச் சஃபாரிகள் குறித்து அரசாங்கம் கடுமையான விதிமுறைகளை உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள அந்த அமைப்பு, யானைகளின் ஆரோக்கியம், உணவு, நீர், ஓய்வு மற்றும் அவற்றைப் பராமரிப்பவர்களின் நடத்தை ஆகியவற்றைக் தொடர்ந்து கண்காணிக்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்துள்ளது.
சுற்றுலா நோக்கங்களுக்காக யானைகளைக் கட்டுப்படுத்த ‘புல்ஹூக்’ (bullhooks – யானைகளைக் கட்டுப்படுத்தும் கொக்கிகள்) மற்றும் தடிகளையும் பயன்படுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும், இது இலங்கையின் சுற்றுலாத் துறையின் பிம்பத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்றும் அந்த அமைப்பு எச்சரித்துள்ளது.
விலங்குகள் மீதான கொடுமைக்குக் காரணமானவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளை ‘அனிமல் வெல்பேர் கலெக்டிவ்’ அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

