Wednesday, November 4, 2026 11:12 am
அமெரிக்க இடைக்கால தேர்தலில் புளோரிடா மாகாணத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 22வது தொகுதியில், ஜனநாயகக் கட்சி சார்பில் இந்திய வம்சாவளியான பியா தாண்டியா போட்டியிட்டார். அவரை எதிர்த்து முன்னாள் கடற்படை வீரர் கேசே அஸ்கார் களமிறங்கினார்.
இதில், முன்னாள் உயர்நிலைப் பள்ளி முதல்வரான பியா தாண்டியா 51.9% வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார். அஸ்கார் 49.1சதவீத வாக்குகளை வாங்கியுள்ளார். பிளோரிடாவின் 22வது தொகுதி ஜனநாயகக் கட்சியினருக்கு மிகவும் சவாலான தொகுதிகளில் ஒன்றாகும். அதனை பியா தாண்டியா கைப்பற்றி கொடுத்துள்ளார்.
இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு புலம்பெயர்ந்த தம்பதிக்கு பிறந்தவர் தான் பியா தாண்டியா. தன்னுடைய 28 வயதில் ஏழை மாணவர்களுக்காக பள்ளி ஒன்றை துவக்கினார். இதன்மூலம், மிக இளம் வயதில் உயர்நிலைப் பள்ளியின் முதல்வராக திகழ்ந்து, அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.
கல்வியாளர், தொழில்நுட்ப கண்டுபிடிப்பாளராகப் பணியாற்றிய அனுபவம் கொண்ட இவர், தற்போது பிளோரிடாவின் புதிய தொகுதியில் வென்று அமெரிக்கப் பிரதிநிதிகள் சபையில் இடம் பிடித்துள்ளார்.
வெர்ஜீனியாவின் 10வது தொகுதியில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் சுஹாஸ் சுப்பிரமணியம் மீண்டும் வெற்றி பெற்றுள்ளார். கலிபோர்னியாவில் மீண்டும் களமிறங்கிய அமி பேரா வெற்றி வாய்ப்பில் உள்ளார். சிலிகான் வேலியில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ரோ கண்ணா முன்னிலை பெற்றுள்ளார். வாஷிங்டனில் மீண்டும் போட்டியிட்ட பிரமிளா ஜெயபால் முன்னிலையில் உள்ளார். மேரிலாண்ட் துணை கவர்னராக அருணா மில்லர் மீண்டும் தேர்வாகியுள்ளார். அமெரிக்க செனட் தேர்தல் வரலாற்றில் தன் பாலின ஈர்ப்பாளரான ஜனநாயக கட்சி வேட்பாளர் கிறிஸ் பாப்பாஸ் வெற்றி பெற்றுள்ளார். நியூ ஹாம்சயர் மாகாண செனட் சபை தேர்தலில், 58.4 சதவீதம் ஓட்டுகள் பெற்று, அதிபர் டிரம்பின் குடியரசு கட்சி வேட்பாளரை தோற்கடித்தார்.


