Tuesday, October 27, 2026 9:34 pm
‘அர்னாப்’ (Arnab) எனும் மிகத் தீவிர சூறாவளியால் இலங்கையின் வானிலையில் ஏற்பட்டுள்ள தாக்கம், நாளை முதல் படிப்படியாகக் குறையத் தொடங்கும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தற்போது வங்காள விரிகுடாவின் மேற்கு-மத்திய பகுதியில் நிலைகொண்டுள்ள இந்தச் சூறாவளி, இன்று (அக்டோபர் 27) முற்பகல் 11.30 மணியளவில், காங்கேசன்துறைக்கு வடகிழக்கே சுமார் 800 கிலோமீற்றர் தொலைவில், வட அகலாங்கு 16.2° ,கிழக்கு நெட்டாங்கு 83.7° ஆகிய ஆயத்தொலைவுகளுக்கு அருகில் மையம் கொண்டிருந்தது.
இந்த மிகத் தீவிர சூறாவளி, நாளை முற்பகல் 11.30 மணியளவில் ஆந்திரப் பிரதேசம் வழியாக இந்தியக் கரையை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், மேல் மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி ,மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும்.
ஊவா மாகாணத்திலும், மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் பிற்பகல் 1.00 மணிக்கு மேல் சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்ய வாய்ப்புள்ளது.
மத்திய மலைநாட்டின் மேற்குச் சரிவுகள், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், திருகோணமலை மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணிக்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
இடியுடன் கூடிய மழையின் போது ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க, பொதுமக்கள் போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

