Monday, October 5, 2026 4:49 pm
பதின்மூன்று வயதான எஸ். இஷான், புதன்கிழமையன்று பாக்கு நீரிணையை இருமுறை கடந்து, இந்தச் சாதனையை நிகழ்த்திய மிக இளவயது எஸ்.14 மாற்றுத்திறனாளி நீச்சல் வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.
சென்னையைச் சேர்ந்தஇஷான் , செப்டம்பர் 29 ஆம் திகதி மாலை 5 மணிக்குத் தொடங்கி, செப்டம்பர் 30 ஆம் திகதி காலை 11.50 மணிக்கு தனது பயணத்தை நிறைவுசெய்து, சுமார் 64 கிலோமீற்றர் தூரத்தை 18 மணி 50 நிமிடங்களில் கடந்தார். அவர் தமிழ்நாட்டிலுள்ள தனுஷ்கோடியிலிருந்து இலங்கையிலுள்ள தலைமன்னார் வரை நீந்திச் சென்று மீண்டும் தனுஷ்கோடிக்கே திரும்பினார்.
கோவாவில் 5 கி.மீ கடல் நீச்சலையும், கொச்சியில் 10 கி.மீ நீச்சலையும் மேற்கொண்டதைத் தொடர்ந்து இந்தக் கடல் பயணம் அமைந்தது. அதற்கான தயாரிப்பாக, அவர் பல்வேறு கடல் சூழல்களில் பயிற்சி மேற்கொண்டார்; படிப்படியாகக் கரைக்கு அருகில் நீந்துவதிலிருந்து கடலின் தொலைதூரப் பகுதிகளுக்குச் செல்லும் பயிற்சிகளுக்கு முன்னேறினார்.
இஷான் நீச்சல் குளத்திலும் ஒரு சிறப்பான சாதனையைப் படைத்துள்ளார். கடந்த ஜூன் மாதம் பெங்களூருவில் நடைபெற்ற ஜூனியர் மற்றும் சப்-ஜூனியர் தேசிய பரா நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டியில், அவர் சப்-ஜூனியர் சிறுவர்களுக்கான 100 மீட்டர் பேக்ஸ்ட்ரோக், 100 மீற்றர் பட்டர்ஃபிளை மற்றும் 200 மீற்றர் தனிநபர் மெட்லி போட்டிகளில் தங்கம் வென்றார்.
2025-ல் நடைபெற்ற தேசிய சம்பியன்ஷிப் போட்டிகளில், அவர் 100 மீற்றர் பட்டர்பிளை பிரிவில் தங்கப் பதக்கத்தையும், 200 மீட்டர் தனிநபர் மெட்லி பிரிவில் வெள்ளிப் பதக்கத்தையும் வென்றார்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் நடைபெற்ற தேசிய மற்றும் தமிழக மாநிலப் போட்டிகள் அனைத்திலும் அவர் எட்டு தங்கம் மற்றும் இரண்டு வெள்ளிப் பதக்கங்களை வென்றுள்ளார்.
இஷானுக்கு இரண்டு வயதிலேயே ஆட்டிசம், அறிவுசார் குறைபாடு மற்றும் கவனக்குறைவு அதிசெயல்பாட்டுக் கோளாறு இருப்பது கண்டறியப்பட்டதாக அவனது தாய் ஷர்மிலா கூறுகிறார். அவர் அறிவுசார் குறைபாடுள்ள நீச்சல் வீரர்களுக்கான பிரிவான S14-ல் போட்டியிடுகிறார்.

