Friday, July 24, 2026 2:18 pm
கல்லுண்டாயில் அடிக்கடி குப்பைமேடு தீப்பற்றுவதில் யாழ் மாநகர சபையினுடைய பெயரையும் ஆட்சியில் உள்ள எங்களுடைய கட்சியினுடைய பெயரையும் கெடுப்பதற்கான சில விஷமிகள் செய்யக்கூடிய நடவடிக்கையாக இருக்கலாம் என சந்தேகம் வெளியிட்ட யாழ் மாநகர சபையினுடைய சுகாதார குழுத் தலைவர் சாரூபன், விரைவில் குறித்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்றார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்,
அண்மைக்காலமாக யாழ் மாநகர சபையினுடைய கழிவு முகாமைத்துவம் செய்யப்படுகின்ற பகுதிகளான காக்கைதீவு மற்றும் கல்லுண்டாய் பகுதிகள் சம்பந்தமாக சில அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்களால் சமூக வலைத்தளங்களிலே திரிபுபடுத்தி வெளியிடப்படுகின்ற தகவல்கள் சம்பந்தமாக உண்மை நிலைமையினை நாங்கள் மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டிய கடப்பாடு சுகாதார குழுத் தலைவராகிய எனக்கு இருக்கின்றது.
சாதாரணமாக ஒரு நாளைக்கு அறுபதுக்கும் மேற்பட்ட திண்மக் கழிவு உழவு இயந்திரங்கள் வருகின்றன, நாற்பதுக்கும் மேற்பட்ட திரவக் கழிவுகள்—அதாவது மலக்கழிவுகள், நீர்க்கழிவுகள் பவுசர்களில் வருகின்றது. அதைவிட கட்டணக் கழிவு எனப்படுகின்ற யாழ் நகர வர்த்தக நிலையங்களிலே இருந்து சேகரிக்கப்படுகின்ற கழிவுகள் இரவு நேரங்களிலே அங்கே கொட்டப்பட வேண்டிய தேவை இருக்கின்றது.
இதற்கு முன்னைய காலங்களிலே சாதாரணமாக ஒரு நாளைக்கு 40 தொடக்கம் 50 வரையான உழவு இயந்திரங்கள் உடைய கழிவுகளைத்தான் அங்கே கொட்டப்பட்டு வந்தன. தற்போது, எனக்கு தரப்பட்ட தகவலின்படி, 101 உழவு இயந்திரக் குப்பைகள் அங்கே கொட்டப்பட்டிருக்கின்றன. எனவே, அது ஒரு மிகப்பெரிய தொகையாக அதிகரித்திருக்கின்றது. அது எங்களுக்கு ஒரு மிகப்பெரிய சவாலாகவும் இருக்கின்றது.
அது மாத்திரமல்ல, அண்மைக்காலமாக கல்லுண்டாய் பகுதியிலே தொடர்ச்சியாக ஏற்பட்ட தீப்பரவல்கள் காரணமாக நாங்கள் அந்த பகுதியிலே முற்றுமுழுதாக தரம் பிரிக்கப்பட்ட பொலித்தீன்கள், இரும்பு, உலோகங்களற்ற குப்பைகளை மாத்திரம்தான் அங்கே கொட்டுவதற்கு மிக இறுக்கமான கட்டுப்பாடுகளை நாங்கள் அங்கே விதித்திருக்கின்றோம். அதன் பிறகு அந்த இடத்திலே தீப்பரவல்கள் சில காலமாக இடம்பெறவில்லை.
அடுத்தபடியாக, கல்லுண்டாய் பகுதியிலே நாங்கள் தற்போது சுற்றுவேலிகள் அடைக்கின்ற வேலைகள், சிசிடிவி கமரா பொருத்துகின்ற வேலைகள், மின்விளக்குகள் பொருத்தப்படுகின்ற வேலைகள், அது மாத்திரமல்ல, அங்கே குவியலாக கொட்டப்பட்டிருக்கின்ற குப்பைகளை நாங்கள் ஒவ்வொரு பகுதிகளாக பிரித்து நடுவிலே பாதைகள் ஒரு வாகனம் சென்று அதனை கண்காணிக்கக்கூடிய வகையிலும், ஒரு தீ ஏற்பட்டால் அந்த ஒரு சிறு பகுதி மாத்திரம் சேதமடையக்கூடிய ஒரு வகையிலும் அந்த குப்பைகளை நாங்கள் பகுதி பகுதிகளாக தரம்பிரித்து செய்கின்ற வேலைகளை அங்கே ஆரம்பித்து, அதற்கான ஆரம்பகட்ட வேலைகள் நடைபெற்று வருகின்றது.
எனவே தற்போது மேலதிகமான குப்பைகளை நாங்கள் அங்கே கொட்டுவதை தவிர்த்து வருகின்றோம். உண்மையிலேயே காக்கைதீவு பகுதியிலே மீள்சுழற்சி மையம் எனப்படுவது குப்பைகளில் இருக்கின்ற கழிவுகளை தரம்பிரித்து அதற்குரிய பகுதிகளுக்கு அனுப்பப்படுகின்ற செயற்பாடு. ஆனால் தற்போது அங்கே நாங்கள் சில கழிவுகளை தேக்கி வைக்க வேண்டிய ஒரு கட்டாய நிலைப்பாட்டிலே இருக்கின்றோம். இது நீண்ட காலத்திற்கு ஏற்படக்கூடிய ஒரு விடயம் அல்ல. ஆகக் குறைந்தது இன்னும் ஒரு மூன்று மாதங்களுக்கு இப்படியான ஒரு பிரச்சினை எங்களுக்கு இருக்கத்தான் போகின்றது.
அது மாத்திரமல்ல, அங்கே இருக்கின்ற பிளாஸ்டிக் கழிவுகள், கண்ணாடிக் கழிவுகள், உலோகங்கள் மற்றும் தரம்பிரிக்கப்பட்ட குப்பைகள்—இவை நான்கும் இப்போது காக்கைதீவு பகுதியிலேதான் சேமித்து வைக்கப்பட்டிருக்கின்றது.
எனவே அங்கே ஒரு நாளைக்கு நாங்கள் கொண்டுவருகின்ற 60 உழவு இயந்திர குப்பைகளையும் தரம்பிரிக்க வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கின்றது. அந்த தரம் பிரிப்பதற்காக எங்களிடம் இருக்கக்கூடிய ஊழியர்கள் 7 பேர் மாத்திரமே. எனவே இந்த 7 பேரை வைத்துக்கொண்டு நாங்கள் ஒரு நாளைக்கு 50 உழவு இயந்திர கழிவுகளை தரம்பிரித்து முடிப்பது மிகவும் ஒரு கஷ்டமான விடயமாக இருக்கின்றது. அதற்கும் மேலதிக ஊழியர்களை நாங்கள் ஏற்கனவே கோரியிருக்கிறோம் அதற்கான ஊழியர்கள் இன்னும் ஆளுநரிடமிருந்து எங்களுக்கு கிடைக்கவில்லை.
எனவே அந்த ஊழியர்களை அதிகரிக்கின்ற ஒரு சந்தர்ப்பத்திலே நாங்கள் அந்த குப்பைகளை ஒரே நாளிலேயே தரம்பிரித்து அதற்குரிய இடங்களுக்கு அனுப்புவதனால் அங்கே தேக்கி வைக்க வேண்டிய தேவை ஏற்படாது.
அது மாத்திரமல்ல, நீண்ட நாட்களாக இருந்த குப்பைகளை தரம்பிரிக்க முடியாத ஒரு செயற்பாடும் அங்கே இருக்கின்றது. எனவே அந்த குப்பைகளும் அந்த பகுதியிலேதான் தற்போது கொட்டப்பட்டிருக்கின்றன. நாங்கள் அவற்றை எவ்வாறு அகற்ற முடியும், அவற்றை நாங்கள் உரங்களாக, பசளைகளாக மாற்றுவதற்குரிய செயற்பாட்டுக்கும் வேலைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. தற்போது ஒரு குறுகிய நாட்களுக்கு எங்களுக்கு அந்த ஒரு பிரச்சினை அங்கே இருக்கத்தான் செய்கின்றது.
இப்போது அதிகரித்திருக்கின்ற வெப்பநிலை காரணமாக லைட்டர்கள், பட்டரிகள் மற்றும் சில எரியக்கூடிய, வெடிக்கக்கூடிய பொருட்களால் தீப்பரவல் ஏற்படுகின்றது. ஆனால் அவை கூடுதலாக இரவு 10 மணிக்கு பிறகுதான் எரிவதற்கு ஆரம்பிக்கின்றன என்றவாறு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

