Saturday, July 4, 2026 9:15 pm
அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து நடத்திய போரின் முதல் நாள் வான்வழித் தாக்குதலால் கொல்லப்பட்ட அலி கமேனியின் இறுதி ஊர்வலங்கள் ஈரானில் நடைபெற்று வருகிறது.
அதிகாலை 5.30 மணிக்கெல்லாம், மசூதியைச் சுற்றியுள்ள தெஹ்ரான் வீதிகளில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. சிலர் பல மணிநேரம் பயணம் செய்தும், பலர் கமேனியின் கொடிகளையோ அல்லது சுவரொட்டிகளையோ ஏந்தியபடியும், நாட்டின் உச்சத் தலைவரின் படுகொலையால் ஏற்பட்ட இழப்பு உணர்வையும் பழிவாங்கும் வேட்கையையும் வலியுறுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அந்த நிகழ்விற்கு ஈரானியர்கள் சென்றனர். “அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் மரணம்” என்று கூட்டத்தினர் முழக்கமிட்டபோது, உணர்ச்சிகள் காற்றில் நிறைந்திருந்தன.
86 வயதான கமெனி, இஸ்ரேலிய ஜெட் விமானங்களால் படுகொலை செய்யப்பட்டார். அவரது சவப்பெட்டியைக் காட்சிப்படுத்த அமைக்கப்பட்ட மேடையில், அந்தத் தாக்குதலில் கொல்லப்பட்ட அவரது 14 மாதப் பேத்தி உட்பட, அவரது குடும்பத்தின் மற்ற உறுப்பினர்களின் சவப்பெட்டிகளும் வைக்கப்பட்டிருந்தன.
காலை 8 மணிக்குள், அந்தத் திறந்தவெளி மசூதியில் சுமார் 10,000 பேர் இருந்தனர்; அவர்கள் வலதுபுறம் ஆண்கள், இடதுபுறம் பெண்கள் எனச் சம எண்ணிக்கையில் பிரிக்கப்பட்டிருந்தனர்.
ஆறு நாட்கள், ஐந்து நகரங்களில் நடைபெறும் இந்த இறுதி ஊர்வலத்தின் பிரம்மாண்டமானது, எதிர்ப்பின் அரசியல் மற்றும் மத ரீதியான செய்திகளை உலகின் பிற பகுதிகளுக்கு எடுத்துரைக்கும் நோக்கில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் 3 கோடி மக்கள் வரை இதில் கலந்துகொள்ளக்கூடும் என ஏற்பாட்டாளர்கள் கூறுகின்றனர். ஈராக்கிய அரசியல்வாதிகளின் வேண்டுகோளுக்கு இணங்க, கமெனியின் உடல் ஈராக்கின் ஷியா நகரங்களான கர்பலா, நஜாஃப் வழியாகவும் எடுத்துச் செல்லப்படும்.

