Friday, July 3, 2026 2:42 pm
நெடுந்தீவில் வாழுகின்ற மக்கள் குடிநீரரைப் பெற்றுக் கொள்வதற்கு பல்வேறு சவால்களை எதிர்கொண்டுள்ள நிலையில் , அங்கு முன்னெடுக்கப்படும் கடல்நீரை நன்னீராக்கும் செயற்பாகள் மேலும் விஸ்தரிக்கப்பட்டு குடிநீர் பிரச்சினை முழுமையாக தீர்க்கபட வேண்டும் என்று ஈ.பி.டி.பி. அவசர வேண்டுகோள் விடுத்துள்ளது.
குறித்த விடயம் தொடர்பாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகச் செயலளார் ஸ்ரீகாந் பன்னீர்செல்வம் கருத்து தெரிவிக்கையில்,
‘நெடுந்தீவில் வாழ்ந்து வருகின்ற மக்களுக்கான குடிநீர் தேவையை நிவர்த்தி செய்யும் நோக்கோடு 2010 ஆம் ஆண்டு காலப் பகுதியில் அமைச்சராக இருந்த டக்ளஸ் தேவானந்தா அவர்களின் முயற்சியினால் ஆர்.ஓ. பிளான்ற் எனப்படும் கடல்நீரை நன்னீராக்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
அதன்மூலம் தற்போது நாளாந்தம் 80,000 லீற்றருக்கும் அதிகமான சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பெறப்பட்டு அது 900 குடும்பங்களுக்கு விநியோகிக்கப்பட்டும் வருவதாக கூறப்படுகின்றது.
இருந்தபோதிலும், நெடுந்தீவில் தற்போது மக்கள் தொகை அதிகரித்துள்ள நிலையில் 1400 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் , வாழ்ந்து வருகின்ற நிலையில் அதனுடன் இணைந்த அரச திணைக்களங்கள் பாடசாலைகள் ஆலயங்கள் என பல பொது தேவைகளுக்காகவும் தற்போதுள்ள கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தின் செயற்பாடுகளை மேலும் விஸ்தரிக்க வேண்டிய அவசியம் காணப்படுகின்றது.
எனவே, குறித்த விடயத்தில் தற்போதைய அரசாங்கம் அவதானம் செலுத்தி மக்களின் வாழ்வியலுக்கு அவசியமான குடிநீர் தாராளமாக கிடைப்பதற்கான நடடிக்கைகள் விரைவுபடுத்தப்பட வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும் என்று தெரிவித்துள்ளார்.
இதேவேளை 2010 ஆம் ஆண்டு ஆர்.ஓ. பிளான்ற் எனப்படும் கடல்நீரை குடிநீராக மாற்றும் திட்டம் நெடுந்தீவில் அறிமுகப்படுத்தப்பட்டபோது, அதிகளசான மழைநீர் தாங்கிகளும் 300 குடும்பங்களுக்கான மலசலகூடங்களும் அமைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

