Friday, May 15, 2026 12:43 pm
ஐபிஎல் கிரிகெட் தொடரின் போட்டிகள் விறுவிறுப்பான கட்டத்தை நோக்கி செல்கின்றன. தங்களின் இருப்பை தக்கவைத்துக்கொள்ள ஒவ்வொரு அணியும் போட்டிபோட்டு ஆடுகின்றன.
அந்தவகையில் திலக் வர்மாவின் சிறப்பான துடுப்பாட்டத்தின் மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற போட்டியில் மும்பை இந்தியன்ஸ் தனது வெற்றியைப் பதிவு செய்தது.
தரம்சாலாவில் நேற்றிரவு பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 201 ஓட்டங்கள் என்ற இலக்கை வெற்றிகரமாகத் துரத்திப் பிடித்தது. வெறும் நான்கு விக்கெட்டுகளை மட்டுமே இழந்த மும்பை அணி ஒரு பந்து மீதமிருக்க இலக்கை வெற்றிகரமாகத் துரத்திப் பிடித்தது.
இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி பிரப்சிம்ரன் சிங்கின் அரைசதம் மற்றும் அஸ்மத்துல்லா ஓமர்சாயின் அதிரடி ஆட்டத்தின் உதவியால் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 200 ஓட்டங்களை எடுத்தது.
மும்பை அணி சார்பில பந்து வீச்சில் சர்துல் தாகூர் அதிகபடியாக 39 ஓட்டங்களுக்கு நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார். தீபக் சாஹர் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
201 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய மும்பை இந்தியன்ஸ் தொடக்க ஆட்டக்காரர்களான ரியான் ரிகல்டன் மற்றும் ரோஹித் சர்மா முதல் இரண்டு ஓவர்களில் 13 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தனர்.
தொடர்ந்து அதிரடியாக துடுப்பெடுத்தாடிய ரிகல்டன் ஆட்டத்தின் போக்கையே மாற்றினார். இடது கை ஆட்டக்காரரான அவர் தொடர்ச்சியாக பவுண்டரிகளையும் சிக்ஸர்களையும் விளாசி பவர் பிளேயில் ஆதிக்கம் செலுத்தினார் என்று சொல்லலாம். நான்கு பவுண்டரிகளையும் நான்கு சிக்ஸர்களையும் விளாசி ஆறு ஓவர்களில் மும்பை அணி 59 இற்கு 0 என்ற இலக்கை எட்ட உதவினார். ஏழாவது ஓவரில் 23 பந்துகளில் 48 ஓட்டங்களை எடுத்திருந்த ரிகல்டனை ஓமர்சாய் ஆட்டமிழக்கச் செய்தார்.
நமன் தீர் சிக்ஸருடன் அதிரடி ஆட்டத்தை ஆரம்பித்த போதும் ஜோன்சனின் பந்து வீச்சில் ஒன்பது ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். ரோஹித் சர்மா 26 பந்துகளில் 25 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் யுஸ்வேந்திர சாஹலின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகள் வீழ்ந்த பின்னர் திலக் வர்மா சேஸிங்கின் கட்டுப்பாட்டைத் தன் கையில் எடுத்தார். நெருக்கடியான சூழலிலும் நம்பிக்கையுடன் விளையாடிய திலக் வர்மா தொடர்ந்து பவுண்டரிகளை அடித்ததுடன் ஷெர்ஃபேன் ரதர்ஃபோர்டுடன் இணைந்து சிறப்பாக ஸ்டிரைக்கையும் மாற்றிக்கொண்டார். இந்த ஜோடி மும்பையை மெதுவாக இலக்கை நோக்கி நகர்த்தியது.
சஹாலின் பந்துவீச்சில் 106 மீட்டர் தூரத்திற்கு ஒரு பிரம்மாண்டமான சிக்ஸரை அடித்து வர்மா ஆட்டத்தின் போக்கையே முழுவதுமாக மாற்றினார். அதே ஓவரில் மற்றொரு பவுண்டரியையும் அடித்தார். ரதர்ஃபோர்ட் 17 ஆவது ஓவரில் 21 பந்துகளில் 20 ஓட்டங்களில் ஓமர்சாயின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். திலக் வர்மா 25 பந்துகளில் அரைசதம் அடித்து 75 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்து மும்பையின் வெற்றிக்கு பெரும் பங்காற்றினார். அவரது இன்னிங்ஸில் ஆறு பவுண்டரிகளும் ஆறு சிக்ஸர்களும் அடங்கும்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் வில் ஜாக்ஸ் 10 பந்துகளில் 25 ஓட்டங்களை குவித்து ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்து வைக்க மும்பை இந்தியன்ஸ் அணி 19.5 ஓவர்களில் நான்கு விக்கட்டுகளை மாத்திரம் இழந்து இலக்கை விரட்டிப் பிடித்தது. போட்டியின் ஆட்டநாயகனாக திலக் வர்மா தெரிவானார்.
நேற்று மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக ஆடிய போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்ற பஞ்சாப் கிங்ஸ் அணி இன்னும் வெற்றிப் பாதைக்குத் திரும்ப முடியாமல் போராடிக்கொண்டிருக்கிறது. இது அவர்களின் பிளே ஆஃப் வாய்ப்பையும் வெகுவாகப் பாதிக்கிறது.
இப்படி கடினமான சூழ்நிலைக்கு பஞ்சாப் கிங்ஸ் வந்தது ஏன்? பஞ்சாப் கிங்ஸ் பந்துவீச்சு சீசன் ஆரம்பம் முதலே தடுமாறிக்கொண்டுதான் இருந்தது. அவர்கள் தொடர்ச்சியாக வெற்றி பெற்றுக் கொண்டிருந்ததால் பந்துவீச்சில் இருந்த பிரச்னை பெரிதாக வெளியே தெரியவில்லை. பௌலிங் யூனிட் பலமாக இருந்தால் மட்டுமே ஒரு அணியால் தொடரை வெல்ல முடியும்.
பௌலிங் மற்றும் ஃபீல்டிங் பிரச்னைகள் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு முன்னரே இருந்தது. அவர்களின் அசாத்திய அதிரடி பேட்டிங் தான் அதை மறைத்துக் கொண்டிருந்தது. தற்போது பஞ்சாப் கிங்ஸ் அணியின் பௌலிங் பீல்டிங் தளர்வடையும் போது அந்த அணியின் பலவீனம் பெரிதாக உருவெடுத்து தோல்விக்கு வழிவகுக்கின்றது.

