Friday, May 8, 2026 3:07 pm
தமிழகத்தில் மு.க. ஸ்டாலினின் தலைமையிலான திராவிர முன்னேற்றக் கழகம், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆகிய இரு கட்சிகளில் ஏதேனும் ஒன்று ஆட்சி அமைக்க முயன்றால் தமிழக வெற்றிக் கழகத்தின் 108 சட்டமன்ற உறுப்பினர்களும் இராஜினாமா செய்வார்கள் என வெளியாகி வரும் செய்திகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
திமுக மற்றும் அதிமுக தலைவர்களுக்கு இடையே ஆட்சியமைப்பது தொடர்பான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுவரும் நிலையில் இந்த செய்தி வெளியாகியுள்ளது.
அதிக இடங்களைப் பெற்ற கட்சியைப் புறக்கணித்துவிட்டு இந்த இரண்டு திராவிடக் கட்சிகளும் கைகோர்த்து ஆட்சி அமைக்க முயற்சிக்கக்கூடும் என்ற சந்தேகம் தற்போது வெளியாகியுள்ளது. 108 இடங்களைப் பெற்ற டிவிகே பலத்தைக் கொண்டுள்ளதுடன் தனிப்பெரும் கட்சியாக இருப்பதால் தமிழகத்தில் ஆட்சி அமைப்பதற்கான முதல் வாய்ப்பு உள்ளது.
இதற்கிடையில் போதுமான உறுப்பினர்கள் இல்லை என கூறி விஜய் ஆட்சி அமைக்கும் கோரிக்கையை ஏற்க தமிழக ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் மறுத்துவிட்டார்.
திமுக மற்றும் அதிமுக இணைந்து ஆட்சியை கைப்பற்றுமானால் தவெகவின் 108 அமைச்சர்களும் இராஜினாமா செய்வார்கள் என தகவல் வெளிவந்த நிலையில் அவ்வாறு இராஜினாமா செய்தால் என்னவாகும் என்ற கேள்வி தற்போது பலரிடமும் எழுந்துள்ளது.
தி.மு.க. கூட்டணி 73 இடங்களிலும், அ.தி.மு.க. கூட்டணி 53 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. த.வெ.கவுக்கு காங்கிரஸ் ஆதரவு வழங்கியுள்ளது. இதனால் அவர்களது எண்ணிக்கை 112 ஆக உயர்ந்துள்ளது.
வி.சி.க, இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுகளிடம் தனித்தனியே த.வெ.க நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். த.வெ.க. தனிப்பெரும் கட்சியாக உள்ளபோதும் அக்கட்சியை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்காதது பெரும் சர்ச்சைளை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக பொறுப்பு ஆளுநர் அர்லேகர் தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் 118 இடங்கள் இல்லாமல் ஆட்சி அமைக்க அழைக்க முடியாது. அடுத்த 2 அல்லது 3 நாட்களில் முடிவு எட்டப்படாவிட்டால் அடுத்த கட்ட முடிவுகள் குறித்து ஆலோசிப்பேன் என்றும் தி.மு.க. – அ.தி.மு.க. சேர்ந்து ஆட்சி அமைக்க உரிமை கோரினாலும் சாத்தியம்தான் என்றும் கூறியுள்ளார்.
அ.தி.மு.க. எம்எல்ஏக்களை புதுச்சேரியில் சொகுசு விடுதியில் தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அதேபோன்று தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டாம் என்றும் தற்போது அவசரப்பட்டு முடிவெடுக்க வேண்டாம் எனவும் மு.க.ஸ்டாலின் தமது கூட்டணிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். ஆட்சி அமைப்பதற்கு வி.சி.க. மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவை விஜய் கோரியுள்ள நிலையில் ஸ்டாலின் இந்த அறிவிப்பு முக்கியமானதொன்றாகப் பார்க்கப்படுகின்றது.
இரு திராவிட கட்சிளுக்கு எதிராக பொதுமக்கள் எதிர்வினையாற்றி ஒரே நிலைக்கு கொண்டு சென்று விட்டனர். இதனால் திமுக மற்றும் அதிமுக இணையும் வாய்ப்பும் உள்ளது. இரு கட்சிகளும் சேர்ந்து கூட்டணி அமைத்து ஆட்சியமைக்க முடிவு மேற்கொண்டால் தனிப்பெரும் கட்சியாக உள்ள த.வெ.க. அதிரடி முடிவை எடுக்கும்.
அதற்கேற்ப கட்சியின் ஒவ்வொரு எம்.எல்.ஏ.வும் ராஜினாமா செய்வார்கள் என கூறப்படுகிறது.
இவ்வாறு த.வெ.கவின் 108 உறுப்பினர்களும் இராஜினாமா செய்தால் என்ன நடக்கும் என்பதை பார்ப்போமேயானால்.
108 தவெக எம்எல்ஏக்களும் இராஜினாமா செய்தால் இது பெரிய விடயமாக இருக்கும். இந்திய வரலாற்றில் ஒரே நேரத்தில் இவ்வளவு எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்தது இல்லை. இதற்கு முன்பு கடந்த 2018 ல் கர்நாடகாவில் பாஜகவிற்கு ஆதரவு வழங்குவதற்காக காங்கிரஸ்- ஜேடிஎஸ் கூட்டணியில் இருந்த 13 காங்கிரஸ் எம்எல்ஏக்களும் 3 ஜேடிஎஸ் எம்எல்ஏக்களும் இராஜினாமா செய்தனர்.
பின்னர் கடந்த 2023ம் ஆண்டில் ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் சச்சின் பைலட் இடையேயான அதிகார மோதலில் 81 எம்எல்ஏக்கள் இராஜினாமா செய்து பின்னர் அவர்கள் இராஜினாமாவை திரும்ப பெற்றனர்.
108 தவெக எம்எல்ஏக்கள் ஒரே நேரத்தில் இராஜினாமா செய்தால் அரசியலில் பெரும் கேள்விளையும் பரபரப்பையும் ஏற்படுத்தும். எம்எல்ஏக்கள் இராஜினாமா செய்யும்போது சபாநாயகர் அல்லது துணை சபாநாயகரிடம் கடிதம் வழங்க வேண்டும். ஆனால் தற்போது சட்டசபை கலைக்கப்பட்டுள்ளதால் தவெகவினர் ஆளுநரிடம் தான் ராஜினாமா கடிதத்தை வழங்க வேண்டும்.
234 சட்டசபை தொகுதிகளில் 108 பேர் இராஜினாமா செய்யும்போது எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 126 குறையும்போது மெஜாரிட்டி நம்பர் 64 எம்எல்ஏக்களாக குறையும். இது திமுக அல்லது அதிமுகவிற்கு சாதகமாகவும் அல்லது இருவரும் கூட்டணி அமைத்தால் அதில் குழப்பத்தையும் ஏற்படுத்தலாம்.
ஆட்சியை பிடிக்க யாரும் இல்லாத நிலை வரும் போது ஆளுநர் ஜனாதிபதி ஆட்சிக்கு பரிந்துரை செய்யலாம். அரசியல் சாசனத்தின் 356-வது பிரிவின் கீழ் ஆளுநர் பரிந்துரையில் தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமுலுக்கு கொண்டு வர வாய்ப்புள்ளது. ஜனாதிபதி ஆட்சி வந்தால் சட்டசபை தற்காலிகமாக முடக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு மாநில அரசுக்குப் பெரும்பான்மை உள்ளதா இல்லையா என்பதை நிரூபிக்க வேண்டிய இடம் சட்டப்பேரவைதான் ஆளுநர் மாளிகை அல்ல என்ற கர்நாடக வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு தற்போது பேசுபொருளாகியுள்ளது.
தமிழகத்தில் புதிதாக அமையும் ஆட்சியில் பாஜக இருக்கவேண்டும் என்று நினைப்பதால் தவெகவை எளிதில் ஆட்சி அமைக்க அனுமதிக்காது. இதை விஜய் ஏற்காத பட்சத்தில் ஆட்சி அமைக்கவிடாமல் தடுத்து மீண்டும் தேர்தலைக் கொண்டு வரும் வாய்ப்புள்ளது. மீண்டும் தேர்தல் வந்தால் விஜய் அமோகமாக வெற்றி பெறலாம் என்ற நிலைமை உருவாகியுள்ளது.
தமிழக அரசியலில் என்ன நடக்கிறது என்ன நடக்கும் எதையும் திட்டவட்டமாகத் தெரிவிக்க முடியாத சூழல் இருக்கிறது. என்ன வேண்டுமானாலும் நடக்கும் என்பதை மட்டும் யூகிக்க முடிகிறது.

