Thursday, May 7, 2026 2:59 pm
இலங்கையின் மலையகத் தோட்டப் பகுதிகளில் பணிபுரியும் அப்பாவித் தொழிலாளர்களை இலக்கு வைத்து திட்டமிட்ட வன்முறைச் சம்பவங்கள் அரங்கேறி வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை (07) பகிரங்கமாகத் தெரிவித்தார்.
சமீபகாலமாக இரத்தினபுரி, மாஸ்கெலிய மற்றும் நுவரெலியா போன்ற மாவட்டங்களில் உள்ள தோட்டங்களில் இத்தகைய அச்சுறுத்தலான சூழல் நிலவி வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறிப்பாக, இரத்தினபுரி மாவட்டத்தில் தோட்டப்பகுதியில் வசித்து வந்த தொழிலாளர் ஒருவர், தனது காணியில் வீடு கட்டியமையினால் ஆத்திரமடைந்த தோட்டப் பாதுகாப்பு உத்தியோகத்தரால் மிகக் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு, அங்கிருந்து விரட்டியடிக்கப்பட்ட சம்பவத்தை நேற்று அவர் சபையின் கவனத்திற்குக் கொண்டு வந்திருந்தார். இத்தகைய அடக்குமுறைகள் தற்போது ஏனைய பகுதிகளுக்கும் பரவி வருவதாகக் குறிப்பிட்ட அவர், மாஸ்கெலிய மாவட்டத்தின் மொக்காயா (mocha) தோட்டப்பகுதியிலும், நுவரெலியா மாவட்டத்தின் டெவோன் (devon) தோட்டப்பகுதியிலும் தொழிலாளர்களுக்கு எதிராக இதேபோன்ற வன்முறைச் சம்பவங்கள் நடைபெறுவதாகத் தகவல்கள் கிடைத்துள்ளதாகத் தெரிவித்தார்.
தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை மனித உரிமைகள் மற்றும் அவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என வலியுறுத்திய அவர், பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் சட்டத்தைக் கையில் எடுத்துக்கொண்டு அப்பாவி மக்களைத் துன்புறுத்துவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது எனத் தெரிவித்தார்.
எனவே, இச்சம்பவங்கள் குறித்து உடனடி விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நீதி வழங்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அரசாங்கத்திடம் வலியுறுத்தினார்.

