Thursday, May 7, 2026 11:12 am
விசா நிபந்தனைகளை மீறி இலங்கையில் தங்கியிருந்து, சட்டவிரோதமான முறையில் நிதி மோசடிகளில் ஈடுபட்டு வந்த வியட்நாம் நாட்டை சேர்ந்த பிரஜைகள் 74 பேர் கொள்ளுப்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொள்ளுப்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உத்தராநந்த மாவத்தை பகுதியில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் பொலிஸ் குழுவினரால் நேற்று புதன்கிழமை (06) மாலை விசேட சுற்றிவளைப்பு ஒன்று மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது, செல்லுபடியாகும் விசா இன்றி தங்கியிருந்ததோடு, இணையம் ஊடாக நிதி மோசடிகளில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 41 ஆண்களும் 33 பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் வியட்நாம் நாட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் , 19 முதல் 39 வயதிற்கு இடைப்பட்டவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொள்ளுப்பிட்டி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

