Wednesday, May 6, 2026 2:53 pm
2015 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவி சிவலோகநாதன் வித்யா கடத்தப்பட்டு, கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், சுவிஸ் குமார் உள்ளிட்ட நான்கு பிரதிவாதிகளுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை உயர் நீதிமன்றம் இன்று புதன்கிழமை (06) உறுதி செய்துள்ளது.
மூவரடங்கிய மேல் நீதிமன்ற தீர்ப்பாயத்தினால் விதிக்கப்பட்ட தண்டனையிலிருந்து தங்களை விடுவிக்கக் கோரி பிரதிவாதிகள் தாக்கல் செய்திருந்த மேன்முறையீட்டு மனுக்களை நிராகரித்து, நீதியரசர் ‘பிரீதி பத்மன் சூரசேன’ தலைமையிலான ஐவர் கொண்ட உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் இத் தீர்ப்பை வழங்கியுள்ளது.
இருப்பினும், இந்த வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டிருந்த மேலும் இரு பிரதிவாதிகளின் தண்டனையை நீக்குவதற்கும் நீதிமன்றம் உத்தரவிட்டது. தீர்ப்பு அறிவிக்கப்பட்ட போது, மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த மூவர் zoom தொழில்நுட்பம் ஊடாக நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தனர்.
நீண்ட கால போராட்டத்தின் பின்னர் வித்தியா கொலை வழக்கிற்கு வழங்கப்பட்ட இத் தீர்வானது இலங்கை தமிழ் மக்களிடையே பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

