Tuesday, May 5, 2026 4:15 pm
தமிழக சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தமிழக வெற்றிக் கழகத்தின் எம்.எல்.ஏ-க்கள் கூட்டம் இன்று காலை கட்சித் தலைமையகத்தில் நடைபெற்றது.
தவெக எம்எல்ஏ கூட்டத்தில், தவெக சட்டமன்றக் குழுத் தலைவராக ஒருமனதாக விஜய் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து, தமிழகத்தின் அடுத்த முதலமைச்சர் பொறுப்பை ஏற்க விஜய் அதிகாரப்பூர்வமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகக் கட்சி அறிவித்துள்ளது. எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு: புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 107 எம்.எல்.ஏ-க்களும் (விஜய் இரண்டு தொகுதிகளில் வென்றுள்ளதால்) தங்களது ஆதரவுக் கடிதத்தில் கையெழுத்திட்டு விஜய்யிடம் வழங்கினர்.
சட்டமன்றக் குழுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட விஜய், இன்று மாலை அல்லது நாளை தமிழக ஆளுநரைச் சந்தித்து, தனது கட்சிக்கு 108 எம்.எல்.ஏ-க்கள் இருப்பதைச் சுட்டிக் காட்டி ஆட்சி அமைக்க உரிமை கோருவார்.
குதிரை பேரத்தை தடுக்க மாமல்லபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியை முழுமையாக வாடகைக்கு எடுத்த த.வெ.க. தரப்பு அங்கு எம்எல்ஏக்கள் அவர்களது குடும்பத்தினருடன் தங்க வைக்கப்படுகிறார்கள். வரும் 8ஆம் தேதி விஜய் முதல்வராக பதவியேற்க திட்டம் என்பதால் அதுவரை 106 (விஜய் நீங்கலாக) எம்எல்ஏக்களும் அந்த விடுதியில் தங்க வைக்கப்படுகிறார்கள். தவெக எம்எல்ஏக்களின் கூட்டத்திற்கு அவர்கள் வந்துள்ளதால் அந்த விடுதியில் விஜயின் பாதுகாவலர்கள், த.வெ.க. எம்எல்ஏக்களின் குடும்பத்தார் தற்போது தங்கியிருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

