Monday, May 4, 2026 3:20 pm
தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குகள் எண்ணும் பணி விறுவிறுப்பான நிலையில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் வெளிவரும் தரவு நிலவரங்கள் அரசியல் தரப்பிலும் பொதுமக்களிடமும் ஒரு பக்கம் ஆர்வத்தையும் மறுபக்கம் பரபரப்பையும் ஏற்படுத்துகின்றது.
வெளிவரும் செய்திகள் பெரும்பாலானவை எதிர்பார்க்கப்பட்டவையே. சில கட்சிகளுக்கு ஏமாற்றமும் சில கட்சிகளுக்கு எதிர்பார்க்கப்பட்ட முடிவாகவும் உள்ளன.
234 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வாக்குகள் எண்ணும் பணி தமிழகம் முழுவதும் 62 வாக்கு எண்ணிக்கை மையங்களில் காலை 8 மணிக்கு தொடங்கியது. முதலில் அஞ்சலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு பின்னர் வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவு செய்யப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை எண்ணப்பட்டு வருகின்றது.
17 ஆவது தமிழ்நாடு சட்டப்பேரவைக்கான பொதுத் தேர்தல் மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ஆம் திகதி அன்று நடைபெற்றது. 234 தொகுதிகளிலும் அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் என மொத்தம் 4023 பேர் போட்டியிட்டனர்.
இந்த தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி, அதிமுக தலைமையிலான கூட்டணி, இந்தத் தேர்தலில் புதிதாக களமிறங்கிய நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம், நாம் தமிழர் கட்சி போன்ற கட்சிகள் போட்டியிட்டன.
இந்நிலையில் தமிழக தேர்தல் முடிவுகளில் முன்னணி நிலவரம் பரபரப்பாக வெளியாகி கொண்டிருக்கும் இந்த தருணத்தில் தமிழகத்தின் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான 118 என்ற எண்ணிக்கையை எந்தகூட்டணி வெல்லும் என்ற எதிர்பார்ப்பு தொடர்ந்து அதிகரித்து வந்த வண்ணம் இருக்கிறது.
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் புதிதாக களம் இறங்கி இருக்கும் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகமும் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற கூடும் என்ற எதிர்பார்ப்பு பலம்பெற்று வருகின்றது.
234 தொகுதிகளின் முன்னணி நிலவரம் வெளியிடப்பட்டு வருகின்றன. வெளியாகும் முடிவுகளின் நிலவரப்படி த.வெ.க- 112 இடங்களில் முன்னிலை வகிக்கின்றது. அதிமுக 62 இடங்களிலும், திமுக 60 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளது.
மு.க ஸ்டாலின் சென்னை கொளத்தூர் தொகுதியிலும், உதயநிதி ஸ்டாலின் சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியிலும், எடப்பாடி பழனிச்சாமி சேலம் எடப்பாடி தொகுதியிலும் விஜய் சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதியிலும் சீமான் காரைக்குடி தொகுதியிலும் போட்டியிட்டனர்.
தமிழகத்தில் ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மைக்கு 118 தொகுதிகள் தேவைப்படும் நிலையில் த.வெ.க. தற்போது 100-க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.
பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்ட தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இரண்டு தொகுதிகளிலும் முன்னிலையில் காணப்படுகிறார். கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட மு.க. ஸ்டாலின் பின்னடைவைச் சந்தித்துள்ளார். அதிக தொகுதிகளில் விஜய் தலைமையிலான தவெக முன்னிலைப் பெற்றுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தில் போட்டியிட்ட செங்கோட்டையன், ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, பிரபு உள்ளிட்டவர்கள் முன்னிலைப் பெற்றுள்ளனர்.
வரலாற்றுப் பின்னணி, புதிய அரசியல் முயற்சிகள், மாற்றத்தை எதிர்பார்க்கும் வாக்காளர்கள் இந்த மூன்றின் சங்கமமாக தமிழ்நாடு தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
தமிழ்நாடு தேர்தல் அரசியலில் மக்கள் கூட்டம், சமூக ஊடகத் தாக்கம், நட்சத்திரக் கவர்ச்சி ஆகியவை வெற்றிக்கான ஒரே அளவுகோலாக இருக்க முடியாது என்பதையும் அதேவேளை பாரம்பரியக் கணக்கீடுகள் புதிய அரசியல் அலைகளை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாமல் போகலாம் என்பதையும் இந்த தேர்தல் நினைவூட்டுகிறது.
விஜய்க்கு வரும் கூட்டம் ஓட்டாக மாறுமா என பல தரப்புக்களில் இருந்து கேள்விகள் எழுந்த போதும் தற்போதைய நிலவரங்களை வைத்துப் பார்க்கும் போது தவெக உண்மையில் அமைதியான அரசியல் எழுச்சியை உருவாக்கியுள்ளது எனவே கூற முடிகின்றது.
எதுவாக இருந்தாலும் இந்தத் தேர்தல் தமிழ்நாட்டில் இரு கட்சி ஆதிக்க அரசியலை சவாலுக்கு உட்படுத்தியத் தேர்தலாகவும் விஜயின் அரசியல் வருகை கணிப்புகளையும் கணக்குகளையும் குழப்பிய தேர்தலாகவும் வரலாற்றில் பதிவாகியுள்ளது.
முன்னைய முதல்வர் எம்.ஜி.ஆருக்குப் பிறகு கட்சி ஆரம்பித்த முதல் தேர்தலிலேயே இவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பது நடிகர் விஜய்தான் என அரசியல் விமர்சகர்களின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாக்கு எண்ணிக்கை இன்னும் முழுமையாக முடிவடையாத நிலையில் தற்போதைய நிலவரப்படி ‘தமிழக வெற்றிக் கழகம்’ தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து வருவது தமிழக அரசியலில் ஒரு புதிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது. நடைபெற்று வரும் சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தனிப்பெரும் கட்சியாக த.வெ.க. உருவெடுத்துள்ளது.
வழக்கமாக திமுக – அதிமுக என்ற இரு துருவ அரசியல் போட்டி நிலவிய தமிழ்நாட்டில் இந்த முறை நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் மூன்றாவது சக்தியாகக் களமிறங்கியது.
தேர்தல் பிரச்சாரங்களில் விஜயைக் காண மக்கள் பெருமளவில் திரண்ட காட்சிகள் மாநிலத்தில் அரசியல் மாற்றத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்திருந்தன.
கருணாநிதி – ஜெயலலிதா காலத்திற்குப் பிறகு உருவான அரசியல் வெற்றிடத்தை நிரப்பும் இரண்டாவது சட்டமன்றத் தேர்தலாக இது அமைந்துள்ள நிலையில் மாற்றத்தை விரும்பும் மக்களிடையே தவெக மீது கணிசமான ஆர்வம் காணப்பட்டது.
1967 முதல் மாநில அரசியலில் ஆதிக்கம் செலுத்திய திமுக, அதிமுக ஆகிய திராவிடக் கட்சிகளை தவெக கட்சி பின்னுக்குத் தள்ளியுள்ளது.
மாற்றம் ஏற்படுமா? அல்லது “தற்போதைய ஆட்சி தொடருமா?” என்ற கேள்விக்கான பதில் இன்று தெரியவரும்.

