Sunday, May 3, 2026 6:45 pm
டெல்லியில் நிலவும் கடும் வெப்ப அலையை கருத்தில் கொண்டு, அரசு ஊழியர்களுக்கும், தனியார் ஊழியர்களுக்கும் மதியம் 1 மணி முதல் மாலை 4 மணி வரை கட்டாய ஓய்வு அளிக்க வேண்டும் என டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா உத்தரவிட்டுள்ளார்.
சுட்டெரிக்கும் மதிய வெயிலில் பணியாற்றுபவர்களே வெப்ப தாக்கத்திற்கு அதிகம் உள்ளாவதால், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் கிட்டத்தட்ட 40 நாட்களாகத் தொடர்ச்சியாக 40° செல்சியஸுக்கு அதிகமான வெப்பநிலை பதிவாகி வருகிறது. கடந்த சில ஆண்டுகளாகவே தலைநகர் டெல்லியில் கோடை காலத்தில் அதிக வெப்பம் நிலவுகிறது. இந்த ஆண்டு, கோடைக்காலம் தொடங்குவதற்கு முன்பு, அதிக அபாயம் உள்ள பகுதிகளைக் கண்டறிய செயற்கைக்கோள் தரவுகளைப் பயன்படுத்தி அரசு நகரில் ஒரு விரிவான மதிப்பீட்டை நடத்திய பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
டெல்லியின் சுற்றுவட்டார பகுதிகளான உத்தர பிரதேச மாநிலம் காஸியாபாத், நொய்டா பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், மாணவர்களின் நலன் கருதி பள்ளி நேரத்தை மாற்றி மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மாணவர்களின் உடல்நலத்தை பாதுகாக்கும் பொருட்டு, 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு நேரங்கள் மாற்றப்பட்டுள்ளன. புதிய நேரத்தின்படி, வகுப்புகள் காலை 7:30 மணிக்குத் தொடங்கி, மதியம் 12:30 மணிக்கு நிறைவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

