Sunday, May 3, 2026 2:40 pm
தங்கள் நாடு இணைய அச்சுறுத்தல்களை ஏற்படுத்துவதாக அமெரிக்கா சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகளை வடகொரியா திட்டவட்டமாக மறுத்துள்ளது. இது அமெரிக்காவின் விரோதப் போக்கை நியாயப்படுத்த திட்டமிட்டு பரப்பப்படும் அவதூறு என அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
சர்வதேச அளவில் நடைபெறும் சைபர் தாக்குதல்கள், நிதி மோசடிகளுக்குப் பின்னால் வடகொரியாவின் ஹேக்கர்கள் இருப்பதாக அமெரிக்கா தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. இந்நிலையில், இந்தக் குற்றச்சாட்டுகளை முற்றிலுமாக நிராகரித்துள்ள வடகொரிய வெளியுறவுத்துறை அமைச்சகம், இது தங்கள் நாட்டின் பிம்பத்தைச் சிதைக்க அமெரிக்கா புனைந்த ஒரு கதை என்று கூறியுள்ளது.
இது தொடர்பாக வடகொரிய வெளியுறவுத்துறை அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது:
வடகொரியா இணைய அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாகக் கூறுவது முற்றிலும் ஆதாரமற்றது. இது தனது விரோதக் கொள்கைகளை சர்வதேச அரங்கில் நியாயப்படுத்த அமெரிக்கா அரங்கேற்றும் ‘அபத்தமான அவதூறு’ ஆகும். தங்கள் நாட்டின் நலன்களையும், குடிமக்களின் உரிமைகளையும் பாதுகாக்க வடகொரியா எதற்கும் தயங்காது. அமெரிக்காவின் இத்தகைய அச்சுறுத்தல்களுக்கு எதிராகத் தேவையான அனைத்து பதிலடி நடவடிக்கைகளையும் அரசு தீவிரமாக எடுக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

