Friday, May 1, 2026 11:43 am
நிதியமைச்சின் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் ரங்க ராஜபக்சவின் மரணம் குறித்து விசாரணைகளை முன்னெடுக்க இரண்டு காவல்துறை குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.
குறித்த இரண்டு காவல்துறை குழுக்களும் இரண்டு பிரதம காவல் ஆய்வாளர்களின் மேற்பார்வையின் கீழ் களமிறக்கப்பட்டுள்ளன.
ரங்க ராஜபக்சவின் உடலம் நேற்று வியாழக்கிழமை (30.04.2026) பிற்பகல் குளியாப்பிட்டியில் உள்ள அவரது வீட்டுத் தோட்டத்தின் பின்புறத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
ஆரம்பகட்ட விசாரணைகளில், அவர் நேற்று (30) முற்பகல் 10.00 மணியளவில் வீட்டின் பின்புறத்திற்குச் சென்றதாகவும், பிற்பகல் 2.00 மணியளவில் அவரது உடலம் கண்டெடுக்கப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.
இவரது மரணம் தொடர்பான பிரேத பரிசோதனை இன்று வெள்ளிக்கிழமை (01.05.2026) குளியாப்பிட்டி மருத்துவமனையில் நடைபெறவுள்ளது.
இது குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

