Thursday, April 23, 2026 12:22 pm
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு மிகவும் விறுவிறுப்பான நிலையில் ஆரம்பித்துள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக இன்று நடைபெறுகிறது. 4023 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
5.73 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இவர்களில் 14.59 லட்சம் பேர் முதல்முறை வாக்காளர்களாகக் காணப்படுகின்றனர். தமிழகம் முழுவதும் 33211 இடங்களில் 75064 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
தேர்தலுக்கான வாக்குப்பதிவு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நடைபெற்றுவருகின்றது. தமிழகம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய இரு மாநிலங்களிலும் இன்று மாலை 6:00 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடையும்.

தமிழக சட்டமன்றத் தேர்தல்கள் இன்று ஒரே கட்டமாக நடைபெறும் நிலையில் மேற்கு வங்கத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல்கள் இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளன. அதன் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 29 அன்று நடைபெற உள்ளது. இரு மாநிலங்களினதும் வாக்கு எண்ணும் நடவடிக்கை மே 4 அன்று நடைபெறும். தபால் மூல வாக்குப் பதிவுகள் ஏற்கனவே நிறைவடைந்துள்ளன.

தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், தமிழக வெற்றிக் கழகம் மற்றும் நாம் தமிழர் என நான்கு முனைப் போட்டி நிலவுகிறது.
பாதுகாப்பு பணிகளுக்காக 1 கோடியே 47 இலட்சம் பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பதற்றமான வாக்களிப்பு நிலையங்களாக அடையாளங் காணப்பட்டுள்ள இடங்களில் துப்பாக்கி ஏந்திய துணை இராணுவப்படையினரும், தமிழ்நாடு சிறப்பு பொலிஸ் படையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனர்.
அனைத்து வாக்குச்சாவடிகளிலும் குடிநீர், கழிவறை, தடையற்ற மின்சாரம், அவசர மருத்துவம், கைப்பிடியுடன் கூடிய சாய்வுதளம், மாற்றுத் திறனாளிகளுக்கு சக்கர நாற்காலி, நிழற்பந்தல், வாக்காளர்களுக்கு உதவ தன்னார்வலர்கள் ஏற்பாடு என அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

தமிழகம் முழுவதும் காலை முதலே மக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.
இந்தநிலையில் அரசியல் தலைவர்கள், சினிமாப்பிரபலங்கள் , பொதுமக்கள் வரிசையாக நின்று வாக்குபதிவு செய்து வருகின்றனர்.


