Monday, April 20, 2026 3:16 pm
விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐ.பி.எல். 2026 T20 கிரிக்கெட் தொடரின் 29 ஆவது போட்டி நேற்று நியூ சண்டிகரில் இடம்பெற்றது. இதில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற லக்னோ அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 254 ஓட்டங்களை பெற்றது.
துடுப்பாட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி சார்பாக ப்ரியான்ஷ் 93 ஓட்டங்களையும் கனெலி 87 ஓட்டங்களையும் பெற்றனர். பந்து வீச்சில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் ப்ரின்ஸ் யாதவ் மற்றும் மணிமாறன் சித்தார்த் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
255 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 200 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியடைந்தது.
54 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி அபார வெற்றியை பதிவு செய்தது. துடுப்பாட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி சார்பாக அதிகபட்சமாக அணித் தலைவர் ரிஷப் பண்ட் 43 ஓட்டங்களை பெற்றார். பந்து வீச்சில் பஞ்சாப் கிங்ஸ் அணி சார்பாக மார்க்கே யான்சன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
நேற்று நடைபெற்ற போட்டியில் பிரியான்ஷ் ஆர்யா மற்றும் கூப்பர் கனெலி ஆகியோர் தங்களது பிரமிக்க வைக்கும் சிக்ஸர் மழையால் மைதானத்தை அதிர வைத்தனர். பிரியான்ஷ் ஆர்யா 37 பந்துகளில் 4 பவுண்டரிகள் ஒன்பது சிக்ஸர் அடங்கலாக 93 ஓட்டங்களையும், கனெலி 46 பந்துகளில் 7 சிக்ஸர் 8 பவுண்டரிகள் அடங்கலாக 87 ஓட்டங்களையும் பெற்று அதிரடி காட்டினர்.
பிரியான்ஷ் ஆர்யா 19 பந்துகளில் அரைசதம் அடிக்க கனெலி 35 பந்துகளில் அரைசதம் கடந்தார்.
அதிக முறை 20 பந்துகளுக்கும் குறைவாக அரைசதம் விளாசிய வீரர்கள் பட்டியலில் ப்ரியன்ஷ் ஆர்யா கே.எல். ராகுலை முன்னெறியுள்ளார். தற்போது ப்ரியன்ஷ் ஆர்யா 20 பந்துகளுக்கும் குறைவாக எதிர்கொண்டு மூன்று முறை அரைசதம் விளாசியுள்ளார். லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் 19 பந்துகளிலும், சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 16 பந்துகளிலும் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 19 பந்துகள் என இதுவரை மூன்றுமுறை ப்ரியன்ஷ் ஆர்யா 20 பந்துகளில் அரைசதம் கடந்து சாதனை படைத்துள்ளார்.
பஞ்சாப் கிங்ஸ் அணியின் ஆரம்ப வீரராக களமிறங்கிய பிரப்சிம்ரன் சிங் எதுவித ஓட்டமின்று ஆட்டமிழந்து வெளியேறி ஏமாற்றம் அளித்தார். எனினும் இரண்டாவது விக்கெட்டுக்காக பிரியான்ஷ் ஆர்யா மற்றும் கூப்பர் கனெலி ஆகியோர் வலுவான கூட்டணி அமைத்து 182 ஓட்டங்களை பகிர்ந்து கொண்டனர்.
இந்த வெற்றியின் மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணி புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. 2026 ஐபிஎல் சீசனில் விளையாடிய 6 போட்டிகளில் ஐந்தில் வெற்றி பெற்றிருக்கிறது. இன்னொரு போட்டி மழை காரணமாக தடைபட்டது. இந்த சீசனில் இதுவரை தோல்வியே சந்திக்காத அணி பஞ்சாப் கிங்ஸ் மட்டும்தான்.
பஞ்சாப் கிங்ஸ் அணியின் முதல் 4 வெற்றிகளுமே சேஸ் செய்தபோது வந்தவை. அதில் 2 போட்டிகளில் 200+ ஸ்கோரை எளிதாக சேஸ் செய்தது. மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக 196 என்ற இலக்கை 21 பந்துகள் மீதம் வைத்து வென்றது. இப்படி ஆதிக்கம் செலுத்தி சேஸ் செய்துகொண்டிருந்த அணி லக்னோவுக்கு எதிரான போட்டியில் தான் இந்த சீசனில் முதல் முறையாக முதலில் பேட்டிங் செய்தது. அதிலும் 254 ரன்கள் குவித்து இந்த சீசனின் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்திருக்கிறது.
பேட்டிங் பௌலிங் ஃபீல்டிங் என அனைத்து துறைகளிலும் முழுமையான செயல்பாட்டைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது பஞ்சாப் கிங்ஸ். 2025 ஐபிஎல் இறுதிப் போட்டியில் விளையாடிய 12 பேரில் 10 பேர் இந்த சீசனில் அப்படியே ஆடிக் கொண்டிருக்கிறார்கள். கூப்பர் கனெலியும், ஜேவியர் பார்ட்லெட்டும் இந்த ஆண்டு அந்த அணிக்காக புதிதாக ஆடிக் கொண்டிருக்கிறார்கள். மற்ற வீரர்கள் அனைவரும் அப்படியே தொடர்கிறார்கள். அதுமட்டுமல்ல இந்த சீசனில் இதுவரை அந்த 12 பேர் மட்டுமே களத்தில் விளையாடியிருக்கிறார்கள்.
தன் பேட்டிங் ஃபீல்டிங் தலைமைப்பன்பு அனைத்தின் வாயிலாகவும் தன் அணி வீரர்களுக்கு முன்மாதிரியாக விளங்குகிறார் ஷ்ரேயஸ் ஐயர். திறமையான நல்ல ஃபார்மில் இருக்கும் பேட்டர்கள் மற்றும் பௌலர்கள் நிறைந்திருக்கும் அந்த அணியை முன் நின்று வழிநடத்திக் கொண்டிருக்கிறார் ஷ்ரேயஸ் ஐயர். ஒரு கேப்டனாக அவர் களத்தில் எடுக்கும் முடிவுகளுமே அந்த அணியின் செயல்பாட்டில் தாக்கம் ஏற்படுத்துகின்றன.
இவ்வாறாக சிறந்த தலைமைத்துவம், வீரர்களின் ஒற்றுமை என பலதரப்பட்ட காரணங்கள் மூலம் நடப்பு ஐபிஎல் தொடரில் தோல்வியே சந்திக்காத அணியாக பஞ்சாப் கிங்ஸ் அணி காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
லக்னோ அணி தொடர்ச்சியாக மூன்றாவது தோல்வியைச் சந்தித்து எட்டாவது இடத்திற்குத் தள்ளப்பட்டது.

