Monday, April 20, 2026 3:46 pm
அமெரிக்க இராணுவப் போக்குவரத்து விமானங்கள் ஞாயிற்றுக்கிழமை இஸ்லாமாபாத்தில் தரையிறங்கின என்று விமானப் பயணங்களைக் கண்காணிக்கும் இணையதளத்தின் தரவுகள் காட்டுகின்றன. இது, அமெரிக்கத் துணை ஜனாதிபதி ஜே.டி. வேன்ஸின் வருகைக்கான சாத்தியமான தயாரிப்புகளைக் குறிக்கிறது.
உபகரணங்களை ஏற்றிச் செல்லும் பெரிய அமெரிக்க விமானப்படை சி-17 விமானங்கள் நூர் கான் விமானத்தளத்தில் தரையிறங்கியுள்ளதாக அந்த அறிக்கை தெரிவித்தது.
கண்காணிப்புத் தரவுகளின்படி, ஏப்ரல் 19 ஆம் திகதி மூன்று விமானங்கள் வெவ்வேறு நேரங்களில் தரை இறங்கின. முதலாவது உள்ளூர் நேரப்படி காலை 8:30 மணிக்கும், அதைத் தொடர்ந்து இரண்டாவது காலை 11:03 மணிக்கும், மூன்றாவது பிற்பகல் 2:40 மணிக்கும் தரை இறங்கின.
உயர் மட்ட அமெரிக்கப் பயணங்களுக்கு முன்னதாக வழக்கமாகப் பயன்படுத்தப்படும் பாதுகாப்பு, தகவல் தொடர்பு , பிற ஆதரவு உபகரணங்களை இந்த விமானங்கள் கொண்டு செல்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் இந்தப் பயணத்தை பகிரங்கமாக உறுதிப்படுத்தவில்லை.
அமெரிக்காவிலிருந்து ஒரு முன்கூட்டி வந்த குழு இஸ்லாமாபாத்திற்கு வந்தடைந்ததாக வட்டாரங்கள் தெரிவித்த சில மணி நேரங்களுக்குப் பிறகு, அமெரிக்க விமானங்களின் வருகை குறித்த இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்கா, ஈரான் ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் குழுக்களுக்கு இடையேயான இரண்டாவது சுற்றுப் பேச்சுவார்த்தைகள் அடுத்த வாரம் நடைபெற உள்ளதாகக் கூறப்படும் செய்திகளைத் தொடர்ந்து இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

