Sunday, April 19, 2026 7:44 am
அண்மையில் வெளிவந்த ஆய்வு முடிவு ஒன்றில் சிந்துவெளி நாகரிகம் பற்றிய சில புதிய செய்திகள் வெளிவந்துள்ளன.
‘Oxygen isotope in archaeological bioapatites from India : Implications to climate change and decline of Bronze Age Harappan Civilization’ என்ற தலைப்பில் ‘நேச்சர்’ என்ற தளத்திலேயே இந்த ஆய்வுத்தாளைப் பார்க்கக் கூடியதாகவுள்ளது. இதன் வழி தெரிய வந்த புதிய செய்திகள்.
சிந்துவெளி நாகரிகத்தின் காலமானது முன்னர் கருதப்பட்டதனை விடப் பழமையானது. அரியானா மாநிலத்திலுள்ள பீர்த்தனா (Bhirrana) என்ற இடத்தில் அகழாய்வில் கிடைத்த பானையோடுகள், விலங்கு எலும்புகள் என்பவற்றின் கரிமச் சோதனை மூலமான காலக்கணிப்பானது இற்றைக்கு 8000 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்தினைக் காட்டுகின்றது. இது பண்டைய எகிப்தின் ஆட்சியாளர்களான பார்வோன்கள் (Pharaohs) என்பவர்களின் காலத்தினை விட முந்தியதாக இருக்கலாம் எனத் தெரிய வருகின்றது.
இங்கு கிடைத்த விலங்குகளின் எலும்புகள், பற்கள் என்பவற்றிலுள்ள ஓட்சிசன் ஐசோடோப்புகளை ஆய்வு செய்த ஆய்வாளர்கள் சிந்துவெளி நாகரிகமானது முன்னர் கருதப்பட்டது போன்று காலநிலை மாற்றத்தால் அழியவில்லை என்கின்றனர். தொடர் வறட்சி ஒன்று ஏற்பட்டது உண்மை எனவும், இதனால் வேளாண்மை முறைகளில் மாற்றங்கள் ஏற்பட்டதாகவும் சொல்லப்படுகின்றது. இற்றைக்கு 9000 ஆண்டுகள் முதல் தொடங்கி, இற்றைக்கு 7000 ஆண்டுகள் வரை மழைக்காலத்தால் வளமாக இருந்த இப் பகுதியில், அதற்குப் பின்னரான காலப்பகுதியில் மழைக்காலம் பொய்க்கத் தொடங்கியது. இருந்த போதிலும் நாகரிகம் மறையவில்லை, தொடர்ந்து வளர்ந்தே வந்தது. வளர்ச்சிக் காலப்பகுதிகள் வருமாறு ;
- Early Harappan phase : அரப்பாவின் தொடக்க காலம் – 8000-6500 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலம்.
- Early Mature Harappan : அரப்பாவின் முதிர்ச்சித் தொடக்க காலம் – 6500-5000 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலம்.
- Mature Harappan : முதிர்ச்சியடைந்த அரப்பாவின் காலம் – 5000-2800 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலம்.
மாரிகாலம் பொய்த்த போது, கோதுமை-பார்லி போன்ற பயிர்ச்செய்கைகளிலிருந்து அரிசி-தினை போன்ற தண்ணீர்த் தேவை குறைந்த பயிர்ச்செய்கை முறைகளுக்கு மக்கள் மாறியதாகவும், பின்னர் மேலும் வறட்சி கூடிய போதே மக்கள் வெவ்வேறு இடங்களுக்குப் பிரிந்து போனதாகவும் குறித்த ஆய்வு கூறுகின்றது.

