Saturday, April 18, 2026 8:44 am
அசாம் மாநிலத்தின் சிராங் , கோக்ராஜர் மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வன்முறை, கலவரம் ஆகியவற்றால் மொபைல் இன்டர்நெட் சேவை முடக்கப்பட்டிருக்கிறது. கடந்த 16ம் திகதி இரவு, இந்தியா-பூடான் எல்லையில் உள்ள சிராங் மாவட்டத்தின் ருனிகாடா பகுதியில் வனத்துறையினர் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இந்த நடவடிக்கையின் போது 25 பழங்குடி மக்கள் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டனர். இது அந்தப் பகுதி மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் அரசு வாகனங்களுக்குத் தீ வைத்தனர். வனச்சரகர் அலுவலகத்தையும் கொளுத்த முயன்றனர். இதனையடுத்து வன்முறையை கட்டுப்படுத்த, வனத்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இது அப்பகுதியில் மேலும் பதற்றத்தை அதிகரித்திருக்கிறது.
சிராங் மாவட்டத்தில் தொடங்கிய இந்த பதற்றம், பக்கத்து மாவட்டமான கோக்ராஜருக்கும் பரவியுள்ளது. அங்கு பெரிய அளவிலான மக்கள் கூட்டங்கள் கூடுவது மற்றும் ஆங்காங்கே அசம்பாவிதங்கள் நடப்பது போன்ற சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இந்நிலையில், வன்முறை மேலும் பரவாமல் தடுக்கவும், சமூக வலைதளங்கள் மூலம் வதந்திகள் பரப்பப்படுவதைத் தவிர்க்கவும் அசாம் அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. இந்திய தந்திச் சட்டம் மற்றும் 2017-ஆம் ஆண்டின் தற்காலிக தொலைத்தொடர்பு சேவைகள் இடைநீக்க விதிகளின் கீழ் மொபைல் இன்டர்நெட் , டேட்டா சேவைகள் உடனடியாக நிறுத்தப்பட்டுள்ளன.
நிலைமையை உயர்மட்ட அதிகாரிகள் தீவிரமாகக் கண்காணித்து வருவதாகவும், பொதுமக்கள் அமைதி காக்குமாறும் அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

