Friday, April 17, 2026 3:08 pm
பிள்ளையான் சிறையில் அடைக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கட்சித் தொண்டர்கள் கறுப்புப் பட்டியால் வாயைக் கட்டி அமைதியான முறையில் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
மட்டக்களப்பு காந்திபூங்காவில் இன்று வெள்ளிக்கிழமை இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனை வெலிக்கடை சிறைச்சாலையில் சிறை வைக்கப்பட்டிருப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்தே கட்சியின் தொண்டர்கள் கறுப்புப் பட்டியால் வாயைக் கட்டி அமைதியான முறையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வெலிசறை முகாம் சிறைச்சாலையில் இருந்து சாதாரண கைதிகள் வைக்கப்படும் சிறைச்சாலைக்கு மாற்றுமாறு கோரிக்கை விடுத்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
கிழக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் பிள்ளையான் கடந்த வருடம் ஏப்ரல் 08 ஆம் திகதி மட்டக்களப்பில் வைத்து குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைதுசெய்யப்பட்டு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

