Saturday, April 4, 2026 9:16 pm
கரூர் கூட்ட நெரிசல் பலி வழக்கில் பிணையில் உள்ள தவெக நிர்வாகி மாசி பவுன்ராஜ் இன்று அதிமுகவில் இணைந்துள்ளார். சட்டசபை தேர்தல் பிரச்சாரம் தீவிரமடைந்துள்ள நிலையில் தவெக முக்கிய நிர்வாகி அதிமுகவில் இணைந்துள்ளது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த வழக்கில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களான தவெக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உள்பட ஐந்து பேர் மீது பொலிஸார் வழக்குப்பதிவு செய்தனர். கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் , கரூர் மாநகரச் செயலாளர் பவுன்ராஜ் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர். தற்போது இவர்கள் இருவரும் ஜாமீனில் உள்ளனர். இதில் மதியழகன் கரூர் தொகுதியில் போட்டியிட தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் வாய்ப்பு வழங்கியுள்ளார். தவெக கரூர் மத்திய நகரச் செயலாளர் மாசி பவுன்ராஜுக்கு சீட் வழங்கப்படவில்லை. இந்நிலையில் பவுன்ராஜ் இன்று (ஏப்ரம் 4) அதிமுகவில் இணைந்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலில் தவெகவுக்கும் – திமுகவுக்கும் இடையே தான் போட்டி என தொடர்ந்து பேசி வருகிறார் தவெக தலைவர் விஜய். இந்நிலையில் தேர்தல் நாள் நெருங்கி வரும் சூழலில் தவெகவின் முக்கிய நிர்வாகி, அதிமுகவில் இணைந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

