Saturday, April 4, 2026 9:07 pm
தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் வேப்பனஹள்ளி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட தி.க.குமார், அதிமுக துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமியை சந்தித்து அதிமுகவில் இணைந்துள்ளது தவாகா கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
திமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய தமிழக வாழ்வுரிமை கட்சியின் வேல்முருகன் தமிழக சட்டசபை தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். அவருக்கு தேர்தல் ஆணையம் தனிச் சின்னமான கமரா சின்னத்தை வழங்கி உள்ளது.
தவாகா தலைமையிலான கூட்டணியில் 40 கட்சிகள் இடம் பெற்றுள்ளன. 234 தொகுதிகளிலும் கமரா சின்னத்தில் தான் போட்டியிடுகிறோம். 50 தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கி தந்துள்ளோம் என வேல்முருகன் அறிவித்துள்ளார்.
இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்ட தமிழக வாழ்வுரிமை கட்சி மாவட்ட பொறுப்பாளரும், வேப்பனஹள்ளி சட்டமன்ற தொகுதியின் தவாக வேட்பாளருமான தி.க.குமார், திடீரென அக்கட்சியில் இருந்து விலகி தனது ஆதரவாளர்களுடன், அதிமுக துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி முன்னிலையில் இன்று அதிமுகவில் இணைந்துள்ளார். தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் வேப்பனஹள்ளி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட அக்கட்சியின் மாவட்ட பொறுப்பாளர் தி.க.குமார், வேட்பு மனு தாக்கல் செய்யாமல், வேப்பனஹள்ளி தொகுதியில் போட்டியிடும் அதிமுக துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமியை சந்தித்து அதிமுகவில் இணைந்துள்ளது தவாகா கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
,

