Friday, April 3, 2026 12:15 pm
இயேசு கிறிஸ்து அனுபவித்த துன்பங்களையும், சிலுவையில் அறையப்பட்டு அவர் அனுபவித்த பாடுகளையும் நினைவுகூர்ந்து அனுஸ்டிக்கப்படும் புனித வெள்ளி அல்லது பெரிய வெள்ளி இன்றாகும்.
கிறிஸ்தவர்களின் வழிபாட்டில் முக்கிய நாளாக இந்த புனித வெள்ளி பார்க்கப்படுகின்றது. இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த ஞாயிறு கொண்டாட்டத்திற்கு முந்திய வெள்ளிக்கிழமை அனுஸ்டிக்கப்படும் நிகழ்வாகும்.
உலகம் முழுவதும் கிறிஸ்தவர்கள் இந்த நாளை துக்கமும் தியானமும் நிறைந்த முறையில் அனுஸ்டிக்கின்றனர். யேசு கிறிஸ்து மனிதகுலத்தின் பாவங்களுக்காக தன்னையே அர்ப்பணித்தார் என்ற நம்பிக்கையை மையமாகக் கொண்டு இந்த நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.
இது துக்கநாளாக இருந்தாலும் ஆன்மீக ரீதியில் மிகப் புனிதமான நாளாகக் கருதப்படுகிறது.
இந்த நாளில் தேவாலயங்களில் சிறப்பு ஆராதனைகள் நடைபெறும்.
கிறிஸ்தவர்கள் நோன்பு இருந்து “சிலுவைப் பாதை” எனப்படும் வழிபாட்டு முறையில் கலந்து கொள்கிறார்கள். யேசு சிலுவைக்கு சென்ற பாதையை நினைவுகூறும் இந்த வழிபாடு அவருடைய துன்பத்தையும் தியாகத்தையும் உணரச்செய்கிறது.
புனித வெள்ளி மனிதர்களுக்கு அன்பு மன்னிப்பு தியாகம் ஆகியவற்றின் அர்த்தத்தை உணர்த்தும் நாளாகும். உலகம் எவ்வளவு மாறினாலும் இயேசு கிறிஸ்துவின் தியாகம் மனிதகுலத்திற்கு நம்பிக்கையையும் இரட்சிப்பையும் அளிப்பதாக கிறிஸ்தவர்கள் நம்புகின்றனர்.
அதனால் புனித வெள்ளி என்பது ஒரு வரலாற்று நினைவு நாளாக மட்டும் அல்லாது மனிதர்களின் ஆன்மீக வாழ்வை சிந்திக்க வைக்கும் ஒரு முக்கியமான தினமாகவும் திகழ்கிறது.
கத்தோலிக்க தேவாலயங்களில் புனித வெள்ளி தொடர்பான மூன்று மணிநேர விசேட ஆராதனைகளும் நடைபெறவுள்ளன.

