Friday, March 27, 2026 4:09 pm
கிரிக்கெட் ரசிகர்களுக்கு நாளை முதல் கொண்டாட்டம் ஆரம்பமாகவுள்ளது. இந்தியன் பிறீமியர் லீக் அதாவது ஐ.பி.எல் தொடர் நாளை ஆரம்பிக்கின்றது.
நாளை முதல் இரண்டு மாதங்களுக்கு கிரிக்கெட் ரசிகர்களுக்கு திருவிழா தான். இந்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் 19ஆவது ஆண்டாக நடைபெறும் ஐ.பி.எல் தொடராகும்.
முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் எதிர்கொள்கிறது.
தேர்தல் காரணங்களால் இந்தத் தொடர் இரண்டு கட்டங்களாக நடத்தப்படவுள்ளது. ஐபிஎல் தொடர் மே 31 வரை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சீசனில் மொத்தம் 74 போட்டிகள் நடத்தப்பட உள்ளன. 10 அணிகள் விளையாடும் இந்த ஐபிஎல் தொடர் மொத்தம் 13 நகரங்களில் நடக்கிறது. டெல்லி, கொல்கத்தா, லக்னௌ, சென்னை, ஆகமதாபாத், ஹைதராபாத், மும்பை ஆகிய 7 நகரங்களில் அந்தந்த அணிகளின் 7 லீக் சுற்றுகள் நடைபெறுகின்றன.
லீக் சுற்றில் மொத்தம் 70 போட்டிகள் நடைபெறும். அதன்பின்னர் பிளே ஆஃப் சுற்றில் குவாலிஃபயர் 1, எலிமினேட்டர், குவாலிஃபயர் 2 மற்றும் இறுதிப் போட்டி ஆகியவை நடைபெறும். ஒவ்வொரு அணியும் 14 லீக் போட்டிகளில் விளையாடும். அதில் 7 போட்டிகளில் தங்கள் ஹோம் கிரவுண்டிலும், மற்ற 7 போட்டிகளை எதிரணிகளின் ஹோம் கிரவுண்டிலும் ஆடுவார்கள்.
ருதுராஜ் கெய்க்வாட் தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, அக்ஷர் பட்டேல் தலைமையில் டெல்லி கேபிட்டல்ஸ் அணி, ஷுப்மன் கில் தலைமையில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், அஜிங்க்யா ரஹானே தலைமையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், ரிஷப் பன்ட் தலைமையில் லக்னௌ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையில் மும்பை இந்தியன்ஸ் அணியும், ஷ்ரேயஸ் ஐயர் தலைமையில் பஞ்சாப் கிங்ஸ் அணியும், ரியான் பராக் தலைமையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ரஜத் பட்டிதார் தலைமையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், பேட் கம்மின்ஸ் தலைமையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் 2026ம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடரில் களமிறங்கவுள்ளது.

காயம் காரணமாக ஒருசில போட்டிகளில் பேட் கம்மின்ஸ் விளையாட மாட்டார் என்றும் அவருக்குப் பதிலாக அணியை இஷான் கிஷன் வழிநடத்துவார் என்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அறிவித்திருக்கிறது.
இதுவரை 5 முறை சாம்பியன் பட்டத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வென்றிருக்கிறது. அதேபோன்று மும்பை இந்தியன்ஸ் அணியும் 5 முறை பட்டத்தை வென்றுள்ளது. இதுவரை நடந்த 18 ஐபிஎல் சீசன்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய இரண்டு அணிகள் தங்களது பட்டத்தைத் தொடர்ந்து தக்கவைத்துக்கொண்டுள்ளன. 2025ம் ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதல் முறையாக பட்டத்தை வென்றிருந்தது. இந்த ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இந்த சிறப்புப் பட்டியலில் சேருமா என்பது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
2026 ஆண்டு ஐபிஎல் தொடரில் பல முன்னணி வீரர்கள் காயம் காரணமாக விலகியிருப்பது அந்தந்த அணிகளுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது எனலாம். சமீபத்தில் நிறைவடைந்த டி20 உலகக் கிண்ணத் தொடரின் போது ஏற்பட்ட காயங்கள் மற்றும் பணிச்சுமை காரணமாகப் பல வீரர்கள் ஆரம்பப் போட்டிகளில் பங்கேற்பது சந்தேகமாகியுள்ளது.
ஈரானியப் போருக்கு மத்தியில் நல்லதொரு கவனப்கலைப்பானாகவும், சமூகவலைத்தளங்களில் பேசுபொருளாகவும் இந்தத் தொடர் இருக்கப் போகின்றது. போர் நீடிக்கும் பட்சத்தில் மின்வெட்டுகள் மற்றும் கடலடி கேபிள்கள் தாக்கப்பட்டால் தொடர்பாடல் துண்டிப்பு ஏற்படும் அச்சமும் இருக்கவே செய்கின்றது.
எதுஎவ்வாறு இருப்பினும் நாளை முதல் தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கு கிரிக்கெட் ரசிகர்களுக்கு இது ஒரு திருவிழாக் கொண்டாட்டம் என்றே கூறலாம்.

