Thursday, March 26, 2026 3:08 pm
விமான டிக்கெட்டுகளுக்கு மலிவான அல்லது சிறப்புத் தள்ளுபடிகளை வழங்குவதாகக் கூறி சமூக ஊடகங்களில் பரவி வரும் மோசடிச் செய்திகள் குறித்து மிகவும் எச்சரிக்கையாக இருக்குமாறு இலங்கை பொலிஸார் பொதுமக்களுக்கு எச்சரிக்கைவிடுத்துள்ளனர்.
வழக்கத்திற்கு மாறாக குறைந்த விலைகள் அல்லது விசேட தள்ளுபடி விலைகளில் விமான டிக்கெட்டுக்களை வழங்குவதாகக் கூறி பொதுமக்களை ஏமாற்றிப் பணம் மற்றும் தனிப்பட்ட தகவல்களைத் திருடும் நோக்கில் இவ்வாறான போலி விளம்பரங்கள் பரப்பப்படுவதாக பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இவ்வாறான மோசடிகளில் சிக்கிப் பாதிக்கப்படாமல் இருக்க பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றுமாறு பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர்
சந்தேகத்திற்கிடமான இணைப்புகளைக் கிளிக் செய்வதைத் தவிர்க்க வேண்டும் என பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
எந்தவொரு முறையான விமான நிறுவனமோ அல்லது நம்பகமான முகாமையோ அழைப்புகள் அல்லது குறுஞ்செய்திகள் மூலம் உங்கள் OTP-கள் கடவுச்சொற்கள் அல்லது முக்கியமான நிதித் தகவல்களைக் கோராது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சலுகைகளை எப்போதும் விமான நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது சரிபார்க்கப்பட்ட சமூக ஊடகப் பக்கங்கள் மூலம் சரிபார்க்க அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறான மோசடிகள் குறித்து விழிப்புடன் செயற்படுமாறும், நிதி இழப்புகளைத் தவிர்க்க ஒத்துழைக்குமாறும் இலங்கை பொலிஸார் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

