Sunday, March 22, 2026 2:42 pm
திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு விவகாரத்தால் குழப்பம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கடந்த முறை திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் பண்ருட்டி சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு வென்ற வேல்முருகன் கடும் அதிருப்தியில் இருந்தார். சென்னையில் இன்று அவர் பத்திரிகையாளர்களை சந்தித்தபோது திமுக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதன்மூலம் திமுக கூட்டணியில் இருந்து முதல் கட்சியாக தமிழக வாழ்வுரிமை கட்சி வெளியேறி உள்ளது.
வேல்முருகன் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவராக இருக்கிறார். இவர் கூட்டணி தொடர்பாக திமுகவிடம் முதற்கட்ட பேச்சுவார்த்தையை நடத்தியிருந்தார்.அப்போது வேல்முருகன் கடந்த முறையை விட கூடுதலாக ஒரு இடமும், தனிச்சின்னத்தில் போட்டியிடவும் கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது.. திமுக கூடுதல் தொகுதிகள் வழங்க வேண்டும். அதோடு ஜாதிவாரி கணக்கெடுப்பு, வன்னியர்களுக்கான 10.5 சதவீத இடஒதுக்கீடு, ஈழத்தில் பொது வாக்கெடுப்பு நடத்துதல் மாநில அரசு வேலைவாய்ப்புகளில் தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு 100 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதை உறுதி செய்தல்.
இதனை திமுக ஏற்க மறுத்தது. கடந்த முறையை போல் ஒரு தொகுதி தருவதாகவும், அதில் உதயசூரியன் சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும் என்றும் திமுக கூறியுள்ளதாக கூறப்படுகிறது. 10 கோரிக்கைகள் பற்றி திமுக சரியான பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் வேல்முருகன் அதிருப்தியானார்.

