Wednesday, March 18, 2026 12:30 pm
நாட்டில் மின்சாரத் தேவையைச் சீராக முகாமைத்துவம் செய்யும் நோக்கில், மின்சார வாகன உரிமையாளர்களுக்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க விசேட கோரிக்கை ஒன்றினை விடுத்துள்ளார்.
மின்சார வாகனங்களை மதிய நேரங்களில் மின்னேற்றம் (Charging) செய்யுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார். தினமும் இரவு 6.00 மணி முதல் 10.00 மணி வரை மின்சாரத்திற்கான கேள்வி (Peak Demand) மிக அதிகமாகக் காணப்படுகிறது.
மாலை வேளைகளில் மின்சார வாகனங்களை மின்னேற்றம் செய்வதன் காரணமாக, தேசிய மின் கட்டமைப்பிற்கு சுமார் 300 மெகாவாட் மேலதிக சுமை ஏற்படுவதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
பகல் நேரங்களில் சூரிய சக்தி உள்ளிட்ட புனர்நிர்மாணிக்கத்தக்க எரிசக்தி மூலம் அதிகளவு மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதால், அந்த நேரத்தைப் பயன்படுத்தி வாகனங்களை மின்னேற்றம் செய்வது மிகவும் பொருத்தமானது என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
தற்போதுள்ள திட்டங்களின்படி மின்வெட்டுகளை நடைமுறைப்படுத்தும் எண்ணம் இல்லை என்றும், எனினும் மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் போன்ற நிச்சயமற்ற காரணிகளால் எதிர்காலத் தீர்மானங்கள் அமையலாம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
சிறந்த எரிசக்தி முகாமைத்துவத்திற்காக விரைவில் ‘ஸ்மார்ட் மீற்றர்’ (Smart Meters) அறிமுகப்படுத்தப்படவுள்ளதோடு, அதன் மூலம் பகல் மற்றும் இரவு நேரங்களுக்குத் தனித்தனியான கட்டண முறைகளை அறிமுகப்படுத்தவும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

