Wednesday, February 25, 2026 10:54 am
தொல்புரம் – பாணாவெட்டி வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரி வே.குருபரனின் இடமாற்றத்தை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு வைத்தியசாலையின் நோயாளர் நலன்புரி சங்கமும் பிரதேசத்திலுள்ள பொது அமைப்புகளும் இணைந்து கோரிக்கை விடுத்துள்ளனர்.
வைத்தியசாலைக்கு விஜயம் செய்த நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீபவானந்தராஜாவிடம் இவ்விடயம் தொடர்பான கோரிக்கை கடிதம் கையளிக்கப்பட்டது.
பாணாவெட்டி வைத்தியசாலையானது தொல்புரம், சுழிபுரம், மூளாய், பொன்னாலை, பண்ணாகம், சித்தங்கேணி உள்ளிட்ட பல பிரதேசங்களிலுள்ள ஆயிரக்கணக்கான குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் பயன்பெறும் வைத்தியசாலையாகும். இது பல்வேறு வளப்பற்றாக்குறைகளுடன் இயங்கி வருகின்றது.
இதனை பிரதேச வைத்தியசாலையாக தரமுயர்த்துமாறு தொடர்ந்து கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் வைத்தியர் குருபரன் இவ்வைத்தியசாலையை பொறுப்பேற்ற பின்னர் இங்கு பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
தற்போது இவ் வைத்தியசாலையில் அபிவிருத்திப் பணிகள் இடம்பெற்று வருகின்ற அதேவேளை பொதுமக்களுக்கு சிறந்த மருத்துவ சேவையும் கிடைக்கின்றது.
இதனால் இந்தப் பணிகளை தடையின்றி முன்னெடுப்பதற்காக மருத்துவர் வே.குருபரனை குறைந்தது அடுத்துவரும் ஈாாண்டுகளாவது இங்கு தொடர்ந்து பணியாற்ற அனுமதிக்குமாறு கோரிக்கை கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கோரிக்கை கடிதம் யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

