Monday, February 23, 2026 4:23 pm
இசைஞானி இளையராஜாவின் இசையமைப்பில் ஈழத்தின் வாழ்வியலைச் சுமந்து, ஈழக் கலைஞர்களின் கலைப்படைப்பாக உருவாக்கப்பட்ட “அந்தோனி” திரைப்படம் எதிர்வரும் மார்ச் 13 ஆம் திகதியன்று திரையிடப்படவுள்ளதாக திரைப்படத்தின் ஏற்பாட்டுக் குழு தெரிவித்துள்ளது.
“அந்தோனி” திரைப்படத்தின் திரையிடல் தொடர்பில் யாழ் ஊடக அமையத்தில் இன்று ஊடக சந்திப்பை முன்னெடுத்த இவ்வாறு கூறிய குறித்த படத்தின் ஏற்பாடுக் குழு மேலும் கூறுகையில்,
ஓசை பிலிம்ஸ், கலைவளதி, விஜை பிலிம்ஸ் ஆகியவற்றின் பங்களிப்பில் உருவாக்கப்பட்டுள்ள அந்தோனி திரைப்படம் ஈழத்தின் முழுமையான நீளத் திரைப்படமாக மிகப்பெரும் நிதிச்செலவில் உருவாக்கப்பட்டுள்ளது.
பிரபல தென்னிந்திய இசையமைப்பாளர் இளையராஜாவின் இசை அமைப்பில் உருவாகியுள்ள ஈழத்தின் முதலாவது படைப்பாகும். இலங்கைத் தீவின் கடலோடிகளின் வாழ்வியலை பிரதிபலிப்பதாக, தமிழ் சிங்கள மலையாள மக்களின் வாழ்வியல் கலாசாரத்தை உலகுக்கு எடுத்துச் சொல்லும் கருவை மையமாக கொண்ட திரைப்படமாகும்.
ரசிகர்கள் அதற்கான அங்கீகாரத்தை வழங்கி முழுமையான திரைப்படைப்பாக வெற்றியடையச் செய்ய வேண்டும் என்பதே படக்குழுவின் எதிர்பார்ப்பாகும்.
இது வெறுமனே ஒரு திரைப்படம் அல்ல. இலங்கைத்தீவின் முழுமையான உழைப்பின் கலைப்படைப்பு என்பதை உணர்ந்து ரசிகர்கள் ஆதரவை வழங்குவார்கள் என்று நம்புவதாகவும் தெரிவித்தனர்.

