Friday, February 6, 2026 8:39 pm
தமிழகம், கேரளா, மேற்கு வங்கம் ,அஸ்ஸாம் ஆகிய 4 மாநிலங்களுக்கும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கும் இந்த ஆண்டின் ஏப்ரல், மே மாதங்களில் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற உள்ளது. இந்த தேர்தல்களை எதிர்கொள்ள அரசியல் கட்சித் தலைவர்கள் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே ஆயத்தமாகி வருகின்றனர்.
மதுராங்கத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பரப்புரை கூட்டம் கடந்த ஜனவரி மாதம் 23ஆம் திகதி நடைபெற்றது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சியின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் பிரதமர் வரும் 28ஆம் திகதி மோடி மதுரைக்கு விஜயம் செய்ய உள்ளார். அங்கு நடைபெற உள்ள தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் அவர் பங்கேற்க உள்ளார். அதற்கு முன்னதாக பிரதமர் மோடி, திருப்பரங்குன்றம் கோவிலில் சாமி தரிசனம் செய்ய உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
புதுச்சேரியில் வரும் 11ஆம் திகதி தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மாபெரும் மாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கவுள்ளார். லாஸ்பேட்டையின் விமான நிலைய மைதானத்தில் நடைபெறும் இந்த மாநாட்டில், ஆளும் என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவரும், புதுச்சேரி முதல்வருமான ரங்கசாமி பங்கேற்கவுள்ளார். இந்த மாநாட்டில் புதுச்சேரியில் புதிதாக கட்சி ஆரம்பித்துள்ள லாட்டரி தொழிலதிபர் மார்டினின் மகன் ஜோஸ் சார்லஸ் மார்ட்டினின் லட்சிய ஜனநாயகக் கட்சியும், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணையவுள்ளதாகத் தகவல் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

