Tuesday, February 3, 2026 10:05 am
யாழ்ப்பாணத்தில் உள்ள பாதுகாப்புப் படைத் தலைமையகத்தை அங்கிருந்து அகற்றும் திட்டம் அரசாங்கத்திடம் இல்லை என பாதுகாப்பு அமைச்சு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
யாழ். தலைமையகம் அகற்றப்படவுள்ளதாக சமூக வலைதளங்களிலும் சில ஊடகங்களிலும் பரவி வரும் தகவல்கள் முற்றிலும் ஆதாரமற்றவை என பாதுகாப்புச் செயலாளர், ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொந்தா (Sampath Thuyakontha) தெரிவித்துள்ளார்.
இவ்வாறான வதந்திகளைப் பரப்புவோர் பொதுமக்களிடையே தேவையற்ற அச்சத்தை உருவாக்குவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அரசியல் நிகழ்ச்சி நிரல்களுக்காக இத்தகைய போலிப் பிரச்சாரங்களை மேற்கொள்பவர்களை வன்மையாகக் கண்டிப்பதாகத் தெரிவித்த பாதுகாப்புச் செயலாளர், தவறான தகவல்களைப் பரப்புபவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.
நாட்டின் பாதுகாப்புச் சூழலை ஆரோக்கியமற்றதாக மாற்ற முயலும் இத்தகைய முயற்சிகளுக்குப் பொதுமக்கள் செவிசாய்க்க வேண்டாம் எனவும் பாதுகாப்பு அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.

