Thursday, January 29, 2026 3:31 pm
இலங்கை பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்களால் தொடர்ந்து நான்காவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டு வரும் உண்ணாவிரதப் போராட்டக் களத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் இன்று பிற்பகல் விஜயம் செய்தார்.
நீண்டகாலமாகத் தீர்க்கப்படாத தமது தொழில்சார் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வை வலியுறுத்தி போராட்டக் களத்தில் ஈடுபட்டுள்ள உத்தியோகத்தர்களைச் சந்தித்த அவர் அவர்களின் கோரிக்கைகள் மற்றும் தற்போதைய உடல்நிலை குறித்து விரிவாகக் கேட்டறிந்து கொண்டார்.
இதனைத் தொடர்ந்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் நாட்டின் கல்வித் துறையில் மிக முக்கிய பங்காற்றும் குறித்த உத்தியோகத்தர்களின் நியாயமான கோரிக்கைகளை அரசாங்கம் இனியும் அலட்சியப்படுத்தக் கூடாது என வலியுறுத்தினார்.
மேலும் நிரந்த ஆசிரியர் நியமனம் வேண்டி பாடசாலைகளில் கற்பித்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கொழும்பு ஜனாதிபதி செயலகத்தின் முன்னால் முன்னெடுக்கும் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மட்டக்களப்பை சேர்ந்த குகதாசன் என்பவரின் உடல்நிலை ஆபத்தான நிலையில் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


