Thursday, January 29, 2026 1:37 pm
கத்தோலிக்க பாதிரியார் ஒருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட கம்பஹா பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் மோட்டார் சைக்கிள் குழுவின் ஆறு பொலிஸ் உத்தியோகத்தர்களும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான வழக்கு இன்று கம்பஹா நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அருட்தந்தை மிலான் பிரியதர்ஷன மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 6 பொலிஸ் அதிகாரிகளில் மூவர் நீதிமன்ற அடையாள அணிவகுப்பின் போது கம்பஹா நீதவான் முன்னிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அடையாள அணிவகுப்பின் போது பாதிரியாளர் அடையாளம் கண்டுள்ளதுடன், அவர்களில் ஒருவரே தன்னைத் தாக்கியவர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஏனைய இரு உத்தியோகத்தர்களும் அந்தத் தருணத்தில் அருகில் நின்றவர்கள் என மதகுரு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான வழக்கு விசாரணை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அருட்தந்தை மிலான் பிரியதர்ஷன கடந்த 24 ஆம் திகதி கம்பஹா உடுகம்பொல பிரதேசத்தில் வைத்து மோட்டார் சைக்கிளில் பயணித்த பொலிஸ் அதிகாரிகள் குழுவினரால் தாக்கப்பட்டு நீர்கொழும்பு மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

