Wednesday, January 28, 2026 4:21 pm
மகாராஷ்டிரா மாநில துணை முதல்வர் அஜித் பவார் சென்ற விமானம் இன்று விபத்தில் சிக்கியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விபத்தில் இதில் 66 வயதான அஜித் பவார் அவரது பாதுகாப்பு அதிகாரி, உதவியாளர் உட்பட 5 பேர் சென்றனர். விமானத்தைத் தலைமை விமானி சுமித் கபூர் இயக்கியுள்ளார். மேலும், முதல் அதிகாரி சம்பவி பதக் என்பவர் இருந்துள்ளார்.. அவர்கள் அனைவருமே இந்த விபத்தில் உயிரிழந்தனர்.
அஜித் பவார் சென்ற லியர்ஜெட் 45 விமானம் 6 முதல் 8 பேர் அமரக்கூடியது. இது இந்தியாவின் பெரிய தனியார் சார்ட்டர் விமான நிறுவனங்களில் ஒன்றான டெல்லியைச் சேர்ந்த VSR வென்ச்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்குச் சொந்தமானதாகும். 1990களில் ‘சூப்பர்-லைட்’ ஜெட் பிரிவில் உருவான இந்த மாடல், 2010இல் தயாரிக்கப்பட்டது. இரட்டை எஞ்சின் கொண்ட இந்த விமானம், அதன் வேகம், எரிபொருள் சிக்கனம், உயரமான இடங்களில் பறக்கும் திறனுக்காகப் புகழ்பெற்றது. 47 அடி இறக்கையுடன் கூடிய இந்த விமானம், குறுகிய மற்றும் நடுத்தரத் தூர பயணங்களுக்காக வடிவமைக்கப்பட்டது.
. ஃப்ளைட்ரேடார் தகவல்களின்படி, விபத்தில் சிக்கியது Bombardier Learjet 45 (VT-SSK) ரக விமானமாகும். இது காலை 8:10 மணிக்கு மும்பையிலிருந்து புறப்பட்டுள்ளது. 8:30 மணியளவில் பாராமதியில் முதலில் தரையிறங்கும் முயன்ற நிலையில், போதிய வெளிச்சம் இல்லாததால் விமானத்தால் தரையிறங்க முடியவில்லை.
இதையடுத்து விமானம் மீண்டும் காலை 8:42 மணியளவில் இரண்டாவது முறையாகத் தரையிறங்க முயன்றது. அதுவரை எல்லாமே சரியாகத் தான் போய்க் கொண்டு இருந்தது. ஆனால், 8:45 மணியளவில் அது ரேடாரில் இருந்து மறைந்தது. அடுத்த 4 நிமிடங்கள் விமானம் என்னவானது என்பது தெரியவில்லை. ரேடாரிலும் அது இல்லை. அதன் பிறகே பாராமதி விமான நிலைய ஓடுபாதை அருகே தீப்பிழம்பாக வெடித்துச் சிதறியது தெரிய வந்தது.

