மட்டக்களப்பு மாநகர சபை மேயர் தெரிவு கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் அஸ்மி அவர்களின் தலைமையில் மாநகர சபை சபா மண்டபத்தில் இன்று 11 காலை இடம்பெற்றது.
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியை சேர்ந்த சிவம் பாக்கியநாதனை அதே கட்சியை சேர்ந்த மாசிலாமணி சண்முகலிங்கம் முன்மொழிய ,ஐக்கிய மக்கள் சக்தியை சேர்ந்த நவரெத்தினராசா ரகுபரன் வழிமொழிய வேறு தெரிவுகள் இன்மையால் அவர் ஏகமனதாக மட்டு மாநகரசபை மேயராகத் தெரிவு செய்யப்பட்டார். பிரதி மேயராக வைரமுத்து தினேஸ்குமார் ள் போட்டிக்கு மத்தியில் மொத்த 34 வாக்குகளில் 18 வாக்குகளை பெற்று தெரிவு செய்யப்பட்டார்.
பிரதி மேயருக்கான அறிவிப்பு விடுக்கப்பட்டபோது மாநரசபை உறுப்பினர் வை.தினேஸ் பிரதி முதல்வராக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மாநகரசபை உறுப்பினர் து.மதன் முன்மொழிய ஐக்கிய மக்கள் சக்தியின் மாநகரசபை உறுப்பினர் மீரா சாஹிபு ஆயிசா உம்மா வழிமொழிந்தார்.
இன்னுமொரு தெரிவாக முன்னாள் மாநகர பிரதி மேயர் க.சத்தியசீலனை சுயேட்சைக் குழு உறுப்பினர் சீ.ஜெயந்திரகுமார் முன்மொழிய வி.சசிகலா வழிமொழிந்தார்.
இதன் பிரகாரம் பிரதி மேயர் தெரிவு தொடர்பில் வாக்கெடுப்பு நடாத்துவதற்கான அறிவிப்பு விடுக்கப்பட்டது.
வாக்கெடுப்பு இரகசிய முறையிலா, பகிரங்க முறையிலா என்பதற்கான உறுப்பினர்களின் விருப்பு கோரப்பட்டது. இதன் பிரகாரம் 22 உறுப்பினர்கள் பகிரங்க வாக்களிப்புக்கு விருப்பு தெரிவித்திருந்தனர்.வாக்கெடுப்பு பகிரங்க முறையில் இடம்பெற்றது. வை.தினேஸ் இற்கு ஆதரவாக 18 வாக்குகளும், க.சத்தியசீலனுக்கு ஆதரவாக 4 வாக்குகளும் கிடைக்கபெற்றன.
தேசிய மக்கள் சக்தி ,தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினர் 12 உறுப்பினர்கள் நடுநிலைமை வகித்தனர்.இன்றைய அமர்வினை பார்வையாளர்கள் அரங்கில் இலங்கை தமிழரசுக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், ஞா.சிறிநேசன், இ.சிறிநாத் உட்பட பல்வேறு கட்சியை சேர்ந்த முக்கிஸ்தர்களும் வருகைதந்துள்ளனர்.