Sunday, May 24, 2026 7:57 pm
தமிழ்நாட்டில் 8000 தனியார் மருத்துவமனைகளுக்கு அனுமதி அளிக்கப்படும் என்ற ஊடகங்களின் செய்தியை அடுத்து தமிழக சுகாதாரத்துறை இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளது.
21.05.2026 அன்று மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட இணை இயக்குனர் நலப்பணிகள் ஆய்வுக் கூட்டம் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அவர்கள் கலந்துகொண்டு தமிழ்நாடு மருத்துவ நிறுவனங்கள் முறைப்படுத்துதல் சட்டம் (CEA) குறித்து ஆய்வு செய்தார்.
அப்பொழுது, 2019 முதல் விண்ணப்பித்து நிலைவையில் உள்ள விண்ணப்பங்களை வெளிப்படையான முறையில் பரிசீலிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
பெறப்பட்ட விண்ணப்பங்களின் மீது நேர்மையான முறையில் நடவடிக்கை மேற்கொண்டு தகுதியுள்ள க்ளினிக்/மருத்துவமனைகளுக்கு மட்டும் தற்காலிகச் சான்றிதழ் வழங்க அறிவுரை வழங்கப்பட்டது.
சில செய்திகளில் வருவது போல் புதிதாக 8,000 க்ளினிக்/மருத்துவமனைகள் துவங்குவதற்கு உண்டான எந்த விதமான அறிவிப்பும் வழங்கப்படவில்லை என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

