Friday, July 10, 2026 10:21 am
இந்தியாவில் இருந்து சட்ட விரோதமான முறையில் கடத்தி வரப்பட்டதாக கூறப்படும் சுமார் 10 ஆயிரம் கிலோ நிறையுள்ள 60 ஆயிரத்து 448 கடல் அட்டைகளுடன் மன்னார் சௌத்பார் கடலில் வைத்து 26 மீனவர்கள் நேற்றைய தினம் (09) கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் இருந்து சட்ட விரோதமான முறையில் கடல் அட்டைகள் கடத்தப்படுவதாக கடற்படையினருக்கு கிடைத்த இரகசியத் தகவலைத் தொடர்ந்து கடற்படையினர் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே சட்டவிரோத கடத்தல் கண்டறியப்பட்டுள்ளது. இதன் போது 12 படகுகளில் இருந்து சுமார் 10 ஆயிரம் கிலோ எடையுடைய 60 ஆயிரத்து 448 கடலட்டைகள் இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
குறித்த படகுகள் அனைத்தும் சௌத்பார் கடற்கரைக்கு கொண்டு வரப்பட்ட நிலையில் கடற்படையினரின் மேலதிக நடவடிக்கைகளின் பின்னர் மன்னார் மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர். குறித்த கடலட்டைகள் துப்புரவு செய்யப்பட்டு பொலித்தீன் பைகளில் பொதியிடப்பட்ட நிலையில் கைப்பற்றப்பட்டுள்ளது.
மேலும் கைது செய்யப்பட்ட 26 மீனவர்கள், மற்றும் படகு உள்ளிட்ட ஏனைய பொருட்களை நீதிமன்றத்தில் முற்படுத்த மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

