Thursday, September 24, 2026 6:14 pm
நாட்டின் பல பகுதிகளில் அடுத்த 36 மணித்தியாலங்களில் 100 மி.மீ வரை பலத்த மழை, பலத்த காற்று ,இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (24) எச்சரித்துள்ளது. மாலை 4.00 மணிக்கு வெளியிடப்பட்ட வானிலை முன்னறிவிப்பின்படி, மேல், சபரகமுவ, தென், மத்திய , வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்.இப்பகுதிகளில் சில இடங்களில் சுமார் 100 மி.மீ வரை பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.
அதேவேளை, மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகள், வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்கள் மற்றும் திருகோணமலை, அம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களில் அவ்வப்போது மணிக்கு 30-40 கி.மீ வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வங்காள விரிகுடாவில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் பலவீனமடைந்து சாதாரண காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி வருவதாகவும், இலங்கையின் வானிலையில் அதன் தாக்கம் நாளை சனிக்கிழமை (25) முதல் படிப்படியாகக் குறையும் என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இடியுடன் கூடிய மழையின் போது ஏற்படும் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னலால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

