Thursday, November 19, 2026 1:49 pm
இலங்கை தரநிலைகளின்படி அனுமதிக்கப்பட்ட அளவை விட ஈரப்பதம் அதிகமாக உள்ளதன் காரணமாக, இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 3.5 பில்லியன் ரூபாமதிப்புள்ள சுமார் 120 கொள்கலன்கள் கொண்ட உலர்ந்த மிளகாய், கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாக கொழும்பு துறைமுகத்தில் தேங்கிக் கிடக்கின்றது. இதனை உடனடியாக விடுவிக்குமாறு உள்ளூர் இறக்குமதியாளர்கள் வலியுறுத்தி வரும் நிலையில், இப்பிரச்சினையைத் தீர்க்க இந்திய ஏற்றுமதியாளர்கள் இராஜதந்திரத் தலையீட்டைக் கோரி வருகின்றனர் என ஓர் அதிகாரி தெரிவித்தார்.
இந்த நிலைமையின் விளைவாக உள்ளூர் சந்தையில் காய்ந்த மிளகாயின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது, அதே நேரத்தில் மிளகாய்த்தூள் உற்பத்தியாளர்கள் தேவையை பூர்த்தி செய்ய சிரமப்படுகின்றனர்.
இந்திய மிளகாய் ஏற்றுமதியாளர்கள் சங்கம், மிளகாய் ஏற்றுமதியாளர்கள், வர்த்தகர்கள், பிற பங்குதாரர்கள் உள்ளிட்ட தனது உறுப்பினர்களுக்கு, மறு அறிவிப்பு வரும் வரை இலங்கைக்கு சிவப்பு உலர்ந்த மிளகாய் ஏற்றுமதியை நிறுத்தி வைக்குமாறு ஏற்கனவே தெரிவித்துள்ளது.
இந்திய சிவப்பு உலர்ந்த மிளகாய் வர்த்தகத்தைப் பாதிக்கும் தற்போதைய கவலைகளை நிவர்த்தி செய்வதையும், ஏற்றுமதியாளர்கள், வர்த்தகர்கள் மற்றும் இத்துறையில் உள்ள பிற பங்குதாரர்களின் நலன்களைப் பாதுகாப்பதையும் இந்த முடிவு நோக்கமாகக் கொண்டுள்ளது. அனைத்து உறுப்பினர்களும் தொடர்புடைய ஏற்றுமதியாளர்களும் இந்த முடிவைக் கவனத்தில் கொண்டு தங்களது ஒத்துழைப்பை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். மேலும், கடந்த மாதம் சங்கம் வெளியிட்ட ஒரு செய்திக்குறிப்பின்படி, இடைநீக்கக் காலத்தில், தங்களது தற்போதைய ஒப்பந்தக் கடமைகளுக்கு உட்பட்டு, இலங்கைக்குப் புதிய ஏற்றுமதி ஒப்பந்தங்களில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறும் அவர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில், இலங்கை அதிகாரிகளுடன் இப்பிரச்சனையை ராஜதந்திர வழிகள் மூலம் தீர்ப்பதற்குத் தலையிடுமாறு கோரி, முழு உலர்ந்த சிவப்பு மிளகாய்களை ஏற்றுமதி செய்யும் இந்திய மிளகாய் ஏற்றுமதியாளர்கள் சங்கம் ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் என். சந்திரபாபு நாயுடுவுக்குக் கடிதம் எழுதியுள்ளது.

