Sunday, May 3, 2026 2:46 pm
தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி பெரும்பான்மையைப் பெற்று ஆட்சி அமைக்கும் என மதுரையில் நடைபெற்ற பாஜக ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் உறுதியுடன் தெரிவித்தார்.
சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை (மே 4) நடைபெறுவதை முன்னிட்டு, பாஜக வாக்கு எண்ணிக்கை முகவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம், மதுரை விமான நிலையம் பின்புறம் உள்ள தனியார் கல்லூரியில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு, மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமை வகித்தார். மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று கட்சியினருக்கு ஆலோசனை வழங்கினார்.
இக்கூட்டத்தில், தென் மாவட்டத்தில் உள்ள 17 பாஜக வேட்பாளர்கள், வாக்கு எண்ணிக்கை தலைமை முகவர்கள், அனைத்து வாக்கு எண்ணிக்கை முகவர்கள் என 17 சட்டப்பேரவைத் தொகுதிகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். பின்னர், மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தேசிய ஜனநாயகக் கூட்டணி உறுதியான வெற்றியை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது.
தமிழகத்தின் வளர்ச்சிக்காக உழைக்கக்கூடிய, தமிழ் மக்களின் பெருமை , கலாசாரத்தைப் பாதுகாக்கக்கூடிய, பெண்களின் நலன் மற்றும் கண்ணியத்தை உறுதி செய்யக்கூடிய ஒரு அரசாங்கம் அமையும். இந்த வெற்றியில் எனக்குப் பெரிய நம்பிக்கை உள்ளது.
தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பாளர்கள், அவர்கள் தங்களது வேலையைச் செய்கின்றனர். நாங்கள் எங்கள் வேலையைச் செய்கிறோம். ஒட்டுமொத்த தேசிய ஜனநாயகக் கூட்டணிக் குடும்பமும் மிகச்சிறந்த பிரச்சாரத்தை மேற்கொண்டது. நாம் ஒரு வசதியான பெரும்பான்மையைப் பெற்று ஆட்சி அமைப்போம். இதில் ஏதேனும் சந்தேகம் இருந்திருந்தால், நான் டெல்லியிலிருந்து இவ்வளவு தொலைவு வந்திருக்க மாட்டேன் என்றார்.
மதுரை விமான நிலையம் பின்புறம் உள்ள தனியார் கல்லூரியில் நேற்று முதுகலை மருத்துவப் படிப்பு மாணவர்களுக்கான நீட் தேர்வு நடைபெற்றது. இதே வளாகத்தில், பாஜக கட்சி ஆலோசனைக் கூட்டமும் நடைபெற்றதால், கல்லூரி நிர்வாகத்திடம் மாணவர்களின் பெற்றோர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுபோன்ற கட்சி நிகழ்ச்சிகளை நடத்த அரசு அனுமதித்திருப்பது வேதனை அளிப்பதாக பெற்றோர்கள் தெரிவித்தனர்.

