Monday, November 2, 2026 10:07 pm
அமெரிக்காவின் தென் புளோரிடாவில் அமைந்துள்ள பாம் பீச் கவுண்டி குடியிருப்பு பகுதியில், 9 பேருடன் பயணித்த ‘லியர்ஜெட் 60’ என்ற தனியார் வணிக ஜெட் விமானம் கொடூர விபத்துக்குள்ளானது. டெக்சாஸின் ஆஸ்டின் நகரிலிருந்து பஹாமாஸ் தீவை நோக்கி புறப்பட்ட இந்த விமானம், நடுவானில் மோசமான வானிலை,பனிப்பொழிவு காரணமாக கட்டுப்பாட்டை இழந்து செங்குத்தாகக் கீழே விழுந்து நொறுங்கியது.
இந்த விபத்து அமெரிக்க ஜனாதிஅப்தி டொனால்ட் ட்ரம்பின் மார்-ஏ-லாகோ ஓய்வு விடுதிக்கு அருகில் சுமார் 14 கி.மீ தொலைவில் நிகழ்ந்துள்ளது. அமெரிக்க போக்குவரத்து செயலாளர் ஷான் டஃபி இந்த விபத்தை ஒரு கொடூரமான துயரம் என குறிப்பிட்டதோடு, விபத்துக்கான சரியான காரணத்தை கண்டறிய அமெரிக்க வான்வழி போக்குவரத்து அமைப்பும் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு சபையும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றன.
இவ்விபத்தில் விமானத்தில் பயணித்த 9 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். விமானம் தரையில் மோதிய கணத்திலேயே ராட்சத தீப்பந்தாக வெடித்துச் சிதறியதால், அப்பகுதியில் இருந்த சாலையில் ஒரு பெரிய பள்ளம் ஏற்பட்டது.
அதிர்ஷ்டவசமாக, குடியிருப்பு வீடுகளுக்கு மிக அருகிலும், மக்கள் நடமாட்டம் நிறைந்த வீதிக்கு அருகிலும் விழுந்த போதிலும், தரையில் இருந்த பொதுமக்களுக்கு பெரிய அளவில் காயங்களோ உயிரிழப்போ ஏற்படவில்லை என புளோரிடா ஆளுநர் ரான் டிசாண்டிஸ் தெரிவித்துள்ளார்.

