Thursday, November 19, 2026 3:07 pm
அமெரிக்க பாராளுமன்ற , பிரதிநிதிகள் சபை சபாநாயகர் பதவிக்கு, ஜனநாயகக் கட்சி சார்பில் நியூயோர்க் எம்.பி., ஹக்கீம் ஜெப்ரீஸ் வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் அமெரிக்க வரலாற்றில் இப்பதவியை ஏற்கும் முதல் கறுப்பினத்தவர் என்ற பெருமையை அவர் பெறவுள்ளார்.
அமெரிக்காவில் அண்மையில் நடந்து முடிந்த இடைக்காலத் தேர்தலில், ஆளும் குடியரசுக் கட்சியை வீழ்த்தி ஜனநாயகக் கட்சி பிரதிநிதிகள் சபையில் பெரும்பான்மையைக் கைப்பற்றியது. இதையடுத்து, கட்சியின் அடுத்தகட்டத் தலைவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான ரகசிய வாக்கெடுப்பு நடந்தது.
மொத்தம் பதிவான 262 வாக்குகளில் 251 வாக்குகளைப் பெற்று ஹக்கீம் ஜெப்ரீஸ் அமோக வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து யாரும் போட்டியிடவில்லை என்றாலும், கட்சியின் தீவிர இடதுசாரி சிந்தனையாளர்கள் சிலரிடையே லேசான அதிருப்தி நிலவியது. இருப்பினும், பெரும்பாலான உறுப்பினர்களின் ஆதரவுடன் அவர் சபாநாயகர் வேட்பாளராக ஒருமனதாக அங்கீகரிக்கப்பட்டுள்ளார்.
2027 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 3 ஆம் திகதி புதிய பாராளுமன்ரம் கூடும்போது, ஒட்டுமொத்த சபை உறுப்பினர்களின் வாக்கெடுப்பு மூலம் ஜெப்ரீஸ் அதிகாரப்பூர்வமாக சபாநாயகராகப் பதவியேற்பார். அமெரிக்க ஜனாதிபதி, துணை ஜனாதிபதி ஆகியோருக்கு அடுத்தபடியாக, நாட்டின் மூன்றாவது மிக உயரிய அதிகாரம் மிக்க பதவி இதுவாகும்.
இவருடன் இணைந்து சபையின் பெரும்பான்மைத் தலைவராக கேத்தரின் கிளார்க் (முதல் பெண் தலைவர் , கொறடாவாக பீட் அகுய்லர் (முதல் லத்தீன் அமெரிக்கர்) ஆகியோரும் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டு, புதிய வரலாற்றுச் சாதனை படைக்க உள்ளனர்.

