Wednesday, May 6, 2026 9:22 am
தமிழக அரசியல் களம் எப்போதும் மொழிப்பற்று மற்றும் மாநில உரிமைகளை மையமாக வைத்தே நகர்ந்து வருகிறது. “இந்தி திணிப்பு” என்ற பேச்சுக்கே இடமில்லை என்று முழங்கும் திராவிட மண்ணில், தற்போது ஒரு புதிய விவாதம் கிளம்பியுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) எம்.எல்.ஏ-க்கள், குறிப்பாக மாதர் பதுருதீன் மற்றும் சில சட்டமன்ற உறுப்பினர்கள், தேசிய ஊடகங்களிடம் தமிழக அரசியல் குறித்து பேசும்போது ஆங்கிலத்தைத் தவிர்த்து ஹிந்தியில் உரையாடுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வழக்கமாக தமிழகத்தைச் சேர்ந்த தலைவர்கள் வட இந்திய அல்லது தேசிய ஊடகங்களுக்குப் பேட்டியளிக்கும் போது, தங்களது கருத்துக்கள் சிதையாமல் இருக்க ஆங்கிலத்தையே ஊடக மொழியாகப் பயன்படுத்துவர். ஆனால், சமீபத்தில் தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் டெல்லி ,வட இந்திய ஆங்கிலச் செய்தி நிறுவனங்களுக்குப் பேட்டியளித்தபோது, சரளமான ஹிந்தியில் பதிலளித்துள்ளனர்.
வலைதளங்களில் இது விவாதப் பொருளாக மாறியுள்ளது. “தமிழ்நாடு அரசியலில் முதல் முறையாக ஒரு மாநிலக் கட்சியின் பிரதிநிதிகள் வட இந்திய ஊடகத்திடம் இந்தியில் பேட்டி அளிப்பது இதுதான் தொடக்கம்” என்று அரசியல் விமர்சகர்கள் ஒருபுறம் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். பிரதமர் மோடியையே ஆங்கிலத்தில் பேச வைத்த தமிழ்நாட்டில் இப்படி நடப்பது அதிர்ச்சி அளிப்பதாக விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன.
ஹிந்தி திணிப்புக்கு எதிராகப் பல போராட்டங்களைச் சந்தித்து, தமிழ் மொழியையும் அடையாளத்தையும் காத்த மண்ணில், ஒரு மாநிலக் கட்சியின் பிரதிநிதிகள் சுயமாக இந்தியில் பேசுவது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

