Monday, May 4, 2026 11:53 am
ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகி வரும் நிலையில், பாரதிய ஜனதா கட்சி இந்திய அரசியலில் ஒரு மிகப்பெரிய சுனாமியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜியின் கோட்டையைத் தகர்த்து பாஜக வரலாற்றுச் சாதனை படைக்கும் நிலையை எட்டியுள்ளது. அசாமிலும் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கத் தயாராகி வரும் பாஜக, தென்னிந்திய மாநிலங்களான தமிழ்நாடு , கேரளாவிலும் தனது தடத்தைப் பதிக்கத் தொடங்கியுள்ளது.
மேற்கு வங்காளத்தில் தற்போது வெளியாகியுள்ள நிலவரப்படி, பாஜக யாரும் எதிர்பார்க்காத வகையில் 164 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. இது அந்த மாநிலத்தின் மொத்த இடங்களில் பாதியை விட மிக அதிகமாகும். நீண்ட காலமாக மம்தா பானர்ஜி வசம் இருந்த வங்காளத்தைக் கைப்பற்றி பாஜக அங்கு புதிய வரலாற்றைப் படைக்கக் காத்திருக்கிறது. முதல்வர் மம்தா பானர்ஜியே தனது கோட்டையான பவானிபூரில் பின்னடைவைச் சந்தித்து வருவது திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்து ,முஸ்லிம் வாக்குகள் இந்த முறை பாஜகவுக்குச் சாதகமாகத் திரும்பியுள்ளதே இந்த மாற்றத்திற்குக் காரணம் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
அசாம் , புதுச்சேரியில் பாஜக ஆதிக்கம் அசாம் மாநிலத்தில் பாஜகவின் அசுர வேட்டை தொடர்கிறது. மொத்தம் 126 இடங்களைக் கொண்ட அசாமில், பாஜக தற்போது 80 இடங்களில் முன்னிலையில் உள்ளது. இதன் மூலம் எந்த ஒரு கட்சியின் ஆதரவும் இன்றி பாஜக அங்கு தனித்து ஆட்சி அமைக்கத் தேவையான 63 இடங்களை விட அதிக இடங்களில் வலுவாக உள்ளது. முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தலைமையிலான ஆட்சிக்கு மக்கள் மீண்டும் அங்கீகாரம் அளித்துள்ளதையே இந்த 80 இடங்கள் காட்டுகின்றன. புதுச்சேரியிலும் 6 இடங்களில் பாஜக முன்னிலை பெற்றுள்ளது.
தென்னிந்தியாவைப் பொறுத்தவரை, கேரளாவில் பாஜக இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. கடந்த தேர்தலில் ஒரு இடத்தைக் கூடப் பிடிக்காத பாஜக, இந்த முறை சில இடங்களை பிடிப்பது அக்கட்சிக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகப் பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டில் தவெக, அதிமுக , திமுக ஆகிய கட்சிகளுக்கு இடையே கடுமையான மும்முனைப் போட்டி நிலவும் சூழலிலும், பாஜக 2 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.

