Wednesday, May 6, 2026 9:11 am
தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியமைக்க இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) ஆதரவு அளிக்கக்கூடும் எனப் பரவிய வதந்திகளுக்கு அக்கட்சியின் தேசியத் தலைவர் காதர் மொகிதீன் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியமைக்க இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஒருபோதும் ஆதரவு தராது” எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார். தங்கள் கட்சி எப்போதும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் ஒரு அங்கமாகவே நீடிக்கும் என்றும், கூட்டணியின் தலைமையான திமுக எடுக்கும் எந்தவொரு முடிவுக்கும் தாங்கள் முழுமையாகக் கட்டுப்படுவோம் என்றும் அவர் தனது அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளார். இது விஜய்யின் தவெக தரப்பிற்கு ஒரு பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
விஜய் ஆட்சி அமைப்பதற்காக கட்சிகளை வளைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் திரைக்குப் பின்னால் தீவிரமாக நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. மறுபுறம், திமுக ,அதிமுக ஆகிய இரு திராவிடக் கட்சிகளும் தங்களது அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து ஆலோசித்து வருகின்றன. குறிப்பாக, தவெக ஆட்சியமைப்பதைத் தடுக்க திமுக தனது கூட்டணிக் கட்சிகளைத் தக்கவைத்துக் கொள்வதில் மிகத் தீவிரமாக உள்ளது. காதர் மொகிதீனின் இன்றைய அறிக்கை, திமுக கூட்டணியின் ஒற்றுமையை உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது. தமிழகத்தில் ஒரு நிலையான ஆட்சி அமையுமா அல்லது கூட்டணிப் பேச்சுவார்த்தைகளில் இழுபறி நீடிக்குமா என்பது வரும் நாட்களில் தெரியவரும். விஜய்யின் அரசியல் பயணம் முதல் தேர்தலிலேயே பெரும் வெற்றியைப் பெற்றிருந்தாலும், ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள் அவருக்குப் பெரும் சவாலாகவே மாறியுள்ளன.

