Saturday, November 21, 2026 8:55 pm
ரஷ்யாவைச் சேர்ந்த முன்னாள் உலக ரேபிட் சதுரங்க சம்பியன் டேனில் துபோவ், புதன்கிழமை நடைபெற்ற ஜெருசலேம் ஓபன் ரேபிட் சதுரங்கப் போட்டியில், மொத்தம் ஒன்பது புள்ளிகளுக்கு எட்டு புள்ளிகளைப் பெற்று வெற்றி பெற்றார்.
34 நாடுகள்,பிராந்தியங்கள் ஆகியவற்றில் இருந்து 446 வீரர்கள் பங்கேற்ற இந்தப் போட்டியில், 30 வயதான கிராண்ட்மாஸ்டர் டேனில் துபோவ், டை-பிரேக் (tie-break) அடிப்படையில் முதலிடத்தைப் பிடித்தார். அவருக்கு அடுத்தபடியாக, ஐரோப்பிய கிளாசிக்கல் சதுரங்க சம்பியனான செர்பியாவின் கிராண்ட்மாஸ்டர் அலெக்ஸி சரானா இரண்டாம் இடத்தைப் பெற்றார்.
இறுதிச் சுற்றில் நேருக்கு நேர் மோதிய இருவரும், வெறும் 11 நகர்வுகளுக்குப் பிறகு ஆட்டத்தை சமநிலையில் (draw) முடிக்க ஒப்புக்கொண்டனர். இதன் மூலம், திங்கள்கிழமை தொடங்கவுள்ள நான்கு நாள் ‘ஜெருசலேம் மாஸ்டர்ஸ்’ ரேபிட் சதுரங்கப் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை இருவரும் உறுதிப்படுத்திக் கொண்டனர். இந்தப் போட்டியில் உலகின் தலைசிறந்த 12 கிராண்ட்மாஸ்டர்கள் பங்கேற்கவுள்ளதுடன், மொத்தம் 2,50,000 அமெரிக்க டொலர் பரிசுத் தொகையாக வழங்கப்படவுள்ளது.
ஏற்கனவே பங்கேற்பு உறுதி செய்யப்பட்டுள்ள 10 கிராண்ட்மாஸ்டர்களில், தற்போது உலக ரேபிட் சதுரங்க தரவரிசையில் மூன்றாம் இடத்தில் உள்ள ரஷ்யாவின் இயன் நெபோம்னியாச்சி , நடப்பு சம்பியனான இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி ஆகியோர் அடங்குவர்.
முன்னாள் FIDE உலக சதுரங்க சாம்பியனான உக்ரைனின் ருஸ்லான் பொனோமரியோவ், 7.5 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்தார். அவரும் மற்ற ஒன்பது வீரர்களும் சமமான புள்ளிகளைப் பெற்றிருந்த நிலையில், டை-பிரேக் அடிப்படையில் அவர் மூன்றாவது இடத்தைப் பெற்றார்.

